

வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை தீவிரவாதிகள் மேற்கொண்ட ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது.
இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளுடனுனான சண்டையில் ராணுவ வீரர் ஒருவரும் மரணமடைந்தார். கடந்த 24 மணி நேரத்தில் இரண்டாவது முறையாக எல்லையில் இந்திய ராணுவம் ஊடுருவல் முயற்சியை முறியடித்துள்ளது. கடந்த 15 நாட்களில் மட்டும் 4 முறை தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சி மேற்கொண்டு தோல்வியடைந்தனர்.
இன்றைய ஊடுருவல் முயற்சி தொடர்பாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, "நவுகாம் பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளுடனான சண்டையில் இந்திய தரப்பில் ஜவான் ஒருவர் வீர மரணமடைந்தார்" என்றார்.
முன்னதாக, நேற்று மூன்று தீவிரவாதிகள் எல்லையில் ஊடுருவ முயன்றபோது கொல்லப்பட்டனர். இதேபோல் மே 26-ம் தேதி உரி பகுதியில் ஊடுருவ முயன்ற இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அடுத்த நாளே அதே பகுதியில் மேலும் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.