அரபிக்கடலில் உருவான ‘நிலோபர்’ புயல் குஜராத் அருகே 31-ம் தேதி கரையைக் கடக்கும்: தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை
அரபிக்கடலில் உருவாகியுள்ள ‘நிலோபர்’ புயல், வடக்கு குஜராத் மற்றும் பாகிஸ்தான் அருகே 31-ம் தேதி கரையை கடக்கும். இதனால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடந்த சனிக்கிழமை மத்திய அரபிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, பின்னர், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது மேலும் வலுவடைந்து தற்போது புயலாக மாறியுள்ளது. ‘நிலோபர்’ என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் புயல், நேற்று ஓமன் நாட்டில் உள்ள சலாலா நகரத்துக்கு கிழக்கு, தென்கிழக்கே 880 கி.மீ. தொலை வில் நிலைகொண்டிருந்தது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் கூறும்போது, ‘‘புதியதாக உருவாகியுள்ள ‘நிலோபர்’ புயல், அடுத்த 24 மணி நேரத்தில் அரபிக் கடல் பகுதியில் வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும். பின்னர் திசை மாறி வடகிழக்கு வழியாக பயணிக்கும். 31-ம் தேதி காலை வடக்கு குஜராத் மற்றும் அதையொட்டிய பாகிஸ்தான் பகுதியில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இருக்காது’’ என்றார்.
தமிழகத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவ மழை தீவிர மடைந்து வருகிறது. இதன்காரண மாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கன்னியா குமரி கடலில் உருவான மேல் அடுக்கு சுழற்சி, நேற்றுவரை அதே இடத்தில் நீடித்து வருகிறது. இதனால், மாநிலத்தின் உள்மாவட் டங்களில் கனமழை நீடிக்கும். கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல இடங்களில் நேற்று மழை பெய்துள்ளது. நேற்று காலை 8.30 மணி வரையான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேனி மாவட்டம் மஞ்சள் ஆற்றில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப் பிடாரத்தில் 8 செ.மீ., தருமபுரி மாவட்டம் பென்னாகரம், நீலகிரி மாவட்டம் தேவலா, திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஆகிய இடங்களில் 7 செ.மீட்டரும் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை, தேனி மாவட்டம் பெரியகுளம், கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் 6 செ.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
