Published : 19 Jun 2016 09:00 AM
Last Updated : 19 Jun 2016 09:00 AM

நடிகை விஜயசாந்தி வீட்டில் தங்கம், வைர நகைகள் திருட்டு: 2 பணிப் பெண்கள் கைது

நடிகையும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயசாந்தி வீட்டில் தங்கம், வைர நகைகள் திருடு போனது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட 7 மொழிகளில் 186 திரைப்படங்களில் நடித்தவர் விஜயசாந்தி. சென்னையில் பிறந்த இவர், திரைத்துறையில் புகழ்பெற்ற பிறகு கடந்த 1991-ல் அரசியலில் கால் பதித்தார். ‘தல்லி தெலங்கானா’ என்ற கட்சியை தொடங்கினார்.

பின்னர் அந்தக் கட்சியை கலைத்து விட்டு தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் இணைந்தார். இதைத் தொடர்ந்து அவர், 2009-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் மேடக் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

ஹைதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள எம்எல்ஏ குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் விஜயசாந்தி வீட்டில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு வைர கம்மல்கள், மோதிரம் மற்றும் தங்க வளையல்கள் காணாமல் போனது. இதுகுறித்து நேற்று பஞ்சாரா ஹில்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதைத் தொடர்ந்து போலீஸார் விஜயசாந்தி வீட்டில் பணிபுரியும் 2 பெண்கள் உட்பட 4 பேரிடம் விசாரணை நடத்தினர். இதில் நகைகளை திருடியதாக 2 பெண்கள் போலீஸாரிடம் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அவர்களை கைது செய்ததுடன், அவர்களிடமிருந்த நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x