

ரயில்வே பாஸ்களுடன் ஆதார் எண்களை இணைக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு மாநிலங்களவையில் நேற்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் விவேக் குப்தா பிரச்சினை எழுப்பினார். அதற்கு பதில் அளித்து அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியதாவது: ரயில்வே பாஸ்களுடன் ஆதார் எண்களை இணைக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை. எந்த இணையதளத்தின் மூலமாகவும் ரயில்வே ஓய்வூதியர்களும் ஊழியர்களும் டிக்கெட் பதிவு செய்வதற்கு ஏதுவாக மனித ஆற்றல் மேலாண்மை அமைப்பு ஏற்படுத்தும் முயற்சியில் அரசு இறங்கி உள்ளது.
ரயில்வே பாஸ் வைத்துள்ளவர்கள் இப்போதைய நிலையில் டிக்கெட் பதிவு செய்வதற்கு இணைய தள வசதி ஏதும் வைத்திருக்கவில்லை. அதை நிறைவேற்ற புதிய பணி தொடங்கப்பட்டுள்ளது. மனித ஆற்றல் மேலாண்மை அமைப்பு வசதி ஏற்டுத்தப்பட்டதும் பாஸ் வைத்திருப்பவர்கள் இணைய தளம் மூலமாக டிக்கெட் பதிவு செய்யலாம்.
ரயில்வே துறையில் குரூப் ஏ மற்றும் பி பிரிவில் 16360 அலுவலர்களும் சி, டி பிரிவுகளில் 13,12,449 ஊழியர்களும் உள்ளனர். அவர்களுக்கு அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் பாஸ்கள் வழங்கப்படுகின்றன.
அரசிதழ் பதிவு பெற்ற ரயில்வே அதிகாரிகளுக்கு ஓராண்டுக்கு 6 செட் சிறப்புரிமை கவுரவ பாஸ்கள் வழங்கப்படுகின்றன. அரசிதழ் பதிவு பெறாத ரயில்வே ஊழியர்களுக்கு ரயில்வே பணியில் சேர்ந்து 5 ஆண்டு முடிந்ததும் ஒரு செட் சிறப்புரிமை கவுரவ பாஸ் வழங்கப்படுகிறது. அதற்குப்பிறகு ஆண்டுதோறும் 3 செட் பாஸ்கள் வழங்கப்படுகின்றன.
ரயில்வே சாராத துறை களிலிருந்து மாற்றல் அடிப் படையில் ரயில்வே பணிகளுக் கும் ரயில்வே தணிக்கை துறையிலும் நியமிக்கப்படும் ஊழியர்களுக்கும் ரயில்வே ஊழியர்களின் சம தகுதிக்கு ஒப்பிட்டு பாஸ் வழங்கப்படு கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.