

ஆதார் எண்-ஐ மத்திய அரசு சர்வரோக நிவாரணி மூலிகை மருந்து போல் விற்று வருகிறது. கறுப்புப் பணம் முதல் பயங்கரவாதம் வரை அனைத்திற்குமான மருந்து போல் பாவித்து மத்திய அரசு சிபாரிசு செய்கிறது என்று மூத்த வழக்கறிஞர் அர்விந்த் தத்தர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஆதார் எண் பிழையற்றது, விவரங்கள் கசிய முடியாதது என்று மத்திய அரசு வாதிட்டதை எதிர்த்து அர்விந்த் தத்தர் இவ்வாறு வாதிட்டார்.
“சாதாரண அறிவு உள்ள யாரும் கேட்கலாம், ஆதார் எண் எப்படி கறுப்புப் பணத்தை ஒழிக்கும்? என்று. ஆதார் என்பதை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்து வருகிறது. கருப்புப் பணம், பயங்கரவாதம், கசிவு இன்னோரன்னவைகளுக்கான ஒட்டுமொத்த தீர்வு, மூலிகை மருந்து போன்றது என்று வாதிடுகிறது.
ஆதார் என்பது பாலத்தைக் கட்டிவிட்டு நதியைத் தேடுவது போல் உள்ளது. ஆதாரை பயனுள்ளதாக மாற்ற, பிரச்சாரிக்க பிரச்சினைகளை மத்திய அரசு தேடித்திரிகிறது” என்று மனுதாரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான பினாய் விஸ்வமுக்காக வாதாடிய வழக்கறிஞர் அர்விந்த் தத்தர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, மற்றும் அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் வாதிட்டார்.
அவர் வாதிடும்போது 0.04% பான்கார்டுகளே டூப்ளிகேட்டானவை. 139ஏஏ-வை அறிமுகம் செய்யும் முன் அரசு ஆராய்ச்சி மேற்கொண்டதா? 0.4% டூப்ளிகேட் பான் அட்டைகளுக்காக 99.6% மக்கள் பான் எண்ணுடன் ஆதார் கோர வேண்டுமா? சட்டப்பிரிவு 19 (6)-ன் கீழ் இது அறிவுக்குகந்த கட்டுப்பாடுதானா?
மேலும் 99% ஆதார் வைத்துள்ளனர், பிறகு என்ன பிரச்சினை? இந்த வாதம் தனிநபர் உரிமைகளுக்கும் ஜனநாயகத்துக்கும் சாவுமணி அடிப்பதாகும், என்று வழக்கறிஞர் தத்தர் வாதிட்டார்.
வருமானவரிச் சட்டம் 139ஏஏ, வருமானவரிக் கணக்குகளைச் சமர்ப்பிக்க அனைவரும் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று கோருவதாகும். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மாரத்தன் விவாதங்கள் நடைபெற்ற்தில் இன்று இறுதி நாள் வாதம் நடைபெற்ற போது அரசுக்கு எதிராக இந்த வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
அக்டோபர் 15, 2015-ல் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஆதார் எண் தனிப்பட்ட விருப்பத் தெரிவுக்கு விடப்பட வேண்டும் என்ற உத்தரவிட்டதன் அடிப்படையை அகற்றினால் மட்டும்தான் மத்திய அரசு ஆதார் எண்ணை கட்டாயமாக்க முடியும் என்கிறார் தத்தர்.
இதற்கு நீதிபதி பூஷன் குறுக்கிட்டு, சமூகநலத்திட்டங்களின் பயன்களைப் பெறுவதற்குத்தான் ஆதார் எண் தனிநபர் விருப்பத் தேர்வு என்பது பொருந்தும் மாறாக 139ஏஏ என்ற சட்டப்பிரிவு தனியான ஒரு பிரிவாகும் என்றார், அதற்கு தத்தர் வாதிடும் போது, “உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி நலத்திட்டங்கள், நலமற்ற பிற திட்டங்கள் என்ற வேறுபாடில்லை” என்றார்.
மத்திய அரசு தனது வாதத்தில், அயல்நாட்டு கணக்கு வரி இணக்கச் சட்டத்துக்கு இந்தியா இணக்கமாக இருக்க வேண்டும், என்று வாதிட்டது, அதற்கு தத்தர் பதில் அளிக்கும் போது அந்தச் சட்டத்தில் ஆதாருக்கான தேவை இருப்பதாகத் தெரியவில்லை என்றார். இதற்கு உடனே குறுக்கிட்ட அரசு வழக்கறிஞர் அர்க்யா சென்குப்தா, “அமெரிக்காவுக்கு நாம் டூப்ளிகேட் பான் எண்களைக் கொடுத்தால் நிச்சயம் அது தர்மசங்கடம்தானே” என்றார்.
எனினும், இது 139ஏஏ சட்டப்பிரிவில் கூறப்பட்ட கொள்கைகளுடன் தொடர்புடையதல்ல என்று தத்தர் எதிர்வாதம் புரிந்தார்.
கடைசியில் தத்தர் தன் வாதத்தை நிறைவு செய்கையில், “இருள் உடனடியாகத் தோன்றி விடாது. அந்திவேளையில்தான் நாம் கண்காணிப்புடன் இருக்க வேண்டும், இல்லையெனில் நாம் தொலைந்து விடுவோம். அடிப்படை உரிமைகள் என்பது என்ன பெரும்பான்மையினரின் விளையாட்டுப் பொருளா?” என்று கேள்வி எழுப்பினார்.