ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: ஊடுருவல் முயற்சியை முறியடித்த ராணுவம்

ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: ஊடுருவல் முயற்சியை முறியடித்த ராணுவம்
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 3 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இதன்மூலம் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது.

இதுகுறித்து பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கந்தர்பால் மாவட்டம் ஹடூரா கிராமத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, 5 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படை (போலீஸ் மற்றும் சிஆர்பிஎப் அமைப்புகளின் சிறப்பு அதிரடிப்படை) வீரர்கள் அப்பகுதிக்கு விரைந்து கிராமத்தை சுற்றி வளைத்தனர். அப்போது பாதுகாப்புப் படையினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பதில் தாக்குதல் நடத்தினர்.

இருதரப்புக்கும் இடையே சுமார் 6 மணி நேரம் நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் பலியாயினர். இவர்களிடமிருந்து 2 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. இவர்கள் இருவரும் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. வீரர்கள் தரப்பில் உயிரிழப்பு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனிடையே, ரஜவுரி மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் சிலர் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர். இதை அறிந்ததும் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு தீவிரவாதி பலியானார். அவரது உடல் மற்றும் ஆயுதத்தை நமது வீரர்கள் கைப்பற்றினர். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

நாளை குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தன. இந்நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in