

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் (40), பிரபல விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் (79) ஆகிய இருவருக்கும் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சியில் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது.
குடியரசுத்தலைவர் மாளிகை தர்பார் அரங்கில் சுமார் 6 நிமிடங்கள் நடந்த நிகழ்ச்சியில் விருது வழங்கி இருவரையும் கவுரவித்தார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. குடியரசுத் துணைத்தலைவர் ஹமீது அன்சாரி, மத்திய அமைச்சர்கள், சச்சின் டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி, மகள் சாரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
டெண்டுல்கர் கடந்த ஆண்டு நவம்பர் 16-ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார். அன்றே அவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதைப் பெற்ற முதல் விளையாட்டு வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
கடந்த நவம்பரில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான 200வது டெஸ்ட் போட்டியுடன் விடை பெற்றார் டெண்டுல்கர்.
‘கிரிக்கெட் உலகில் அவரது சாதனைகள் இணையற்றவை. அசாதாரண விளையாட்டு வீரராக அவர் வெளிக்காட்டிய திறமைக்கு சான்றுதான் அவரை தேடி வந்து குவிந்த பல்வேறு விருதுகள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சச்சின் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். இந்த பதவியில் இருக்கும் ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படுவது இதுவே முதல்முறை. ‘எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்திருந்தாலும், காலம் முழுவதும் இந்தியாவுக்காக அரும்பாடுபடுவேன்’ என்று நிருபர்களிடம் கருத்து தெரிவித்தார் சச்சின்.
சி.என்.ஆர். ராவ்
வேதியியல் துறையில் சர்வதேச அங்கீகாரம் பெற்றவர் பேராசிரியர் சிந்தாமணி நாகேச ராமச்சந்திர ராவ். பாரத ரத்னா விருது பெறும் 3-வது விஞ்ஞானி இவர். ‘இந்தியா என்னை கவுரவிப்பதை எதனுடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது‘ என்று விருது பெற்றது பற்றி கருத்து தெரிவித்தார் ராவ்.