கல்விக் கடன் வசதிக்கு தனி இணையதளம்: மத்திய நிதித்துறை இணை அமைச்சர் தகவல்

கல்விக் கடன் வசதிக்கு தனி இணையதளம்: மத்திய நிதித்துறை இணை அமைச்சர் தகவல்
Updated on
1 min read

கல்விக்கடன் கோரி விண்ணப்பிக்கும் மாணவர்களின் வசதிக்காக மத்திய அரசு வித்யா லட்சுமி போர்ட்டல் எனப்படும் இணையதளம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளது என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று பிரைம் பாய்ண்ட் அறக்கட்டளை சார்பில் பொதுத் துறை வங்கிகள் வழங்கும் கல்விக் கடன் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் மத்திய நிதி மற்றும் கம்பெனி விவகாரங்கள் துறையின் இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பங்கேற்றுப் பேசியதாவது:

''கல்விக்கடன் பெற்று வெற்றிபெற்ற மாணவர்களின் வாழ்க்கை மாற்றத்தை வங்கிகள் பிரபலப்படுத்த வேண்டும். வங்கிகள் தங்களது தலைமையகத்தில் கல்விக்கடன் பெறாத மாணவர்களின் குறைகளைக் கண்டறிந்து நிவர்த்தி செய்ய தொடர்பு அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும். இது தொடர்பாக தமது அமைச்சகம் விரைவில் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பும்.

கல்விக்கடன் கோரி விண்ணப்பிக்கும் மாணவர்களின் வசதிக்காக மத்திய அரசு வித்யா லட்சுமி போர்ட்டல் எனப்படும் இணையவாசல் ஒன்றை ஏற்படுத்தி உள்ளது. இந்த இணைய வாசலில் மாணவர்கள் தங்களது தேவைகளை பதிவு செய்தால் வங்கிகள் அந்த மாணவர்களுக்கு கடன் வழங்க முன் வரும். இந்த வசதியை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கல்விக்கடன் பெற்ற மாணவர்கள் வங்கிகளுக்கு கடனைத் திரும்ப செலுத்தினால்தான் வங்கிகள் பிற மாணவர்களுக்கும் கடன் வழங்க இயலும். இதனைக் கருத்தில் கொண்டு மாணவர்களும் பெற்றோர்களும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்'' என்று அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்அறிவுறுத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in