

குஜராத் மாநிலத்தில் வறட்சியான சவுராஷ்டிர பகுதி, நர்மதா நதி நீர் மூலம் பாசன வசதி பெறும் வகையில் ரூ.12,000 கோடி மதிப்பிலான சவுராஷ்டிரா நர்மதா அவ்தாரன் பாசன (சவுனி) திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
சர்தார் சரோவர் அணையி லிருந்து உபரியாக வெளியேறும் நீரை 115 அணைகளில் நிரப்பி, சவுராஷ்டிராவின் 11 வறண்ட மாவட்டங்களுக்கு கால்வாய்கள் மற்றும் குழாய்கள் மூலம் கொண்டு செல்வதுதான் சவுனி திட்டம். திட்டத்தின் முதல் அலகு மூலம் 4.13 லட்சம் ஹெக்டர் நிலப்பரப்பு பாசன வசதி பெறும்.
சன்சோரா பகுதியில் நேற்று நடைபெற்ற திட்ட தொடக்கவிழா வில், அஜி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அஜி-3 அணை யிலிருந்து அஜி-4 அணைக்கு தண்ணீரை பிரதமர் மோடி திறந்து விட்டார். தவரி, யுயுண்ட்-4 நீர்த்தேக்கத்துக்கும் இங்கிருந்து தண்ணீர் ஏற்றப்படும்.
படேல் சமூகத்தினர் பெரும் பான்மையாக வசிக்கும் சன்சோரா பகுதியில் நடைபெற்ற பாசன திட்ட தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, “குஜராத்தில் தேர்தல் நடைபெறவிருப்பதால் நான் இங்கு வந்திருப்பதாக காங்கிரஸ் கூறுகிறது. சலுகைகளை வீசி, வாக்காளர்களைக் கவரலாம். ஆனால், நாட்டை நிர்வகிக்க முடியாது. இந்த திட்டத்துக்காகவும் மாற்றம் மற்றும் வளர்ச்சிக்காகவும் நாங்கள் 15 ஆண்டுகள் உழைத்திருக்கிறோம். முதன்முதலில் குஜராத் முதல்வராக பொறுப்பேற்றபோது, நீர் மேலாண்மையில் கவனம் செலுத்தும்படி விவசாயிகளிடம் கேட்டுக் கொண்டேன். ஆனால், விவசாயிகள் எனக்கு எதிராக போராட்டம் நடத்தி, உருவபொம்மையை எரித்தனர். அவர்களுக்கு புரிய வைக்க 3 ஆண்டுகள் ஆனது. தற்போது, தெளிப்பு நீர், சொட்டுநீர், நுண்ணீர்ப் பாசன முறை தொடர்பான எனது சித்தாத்தந்தை குஜராத் விவசாயிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர்” என்றார்.
நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, துணை முதல்வர் நிதின் படேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
பிரதமர் மோடியின் நிகழ்ச்சியின்| போது, ஹர்திக் படேலின் படிடார் அனாமத் அந்தோலன் சமிதி (பிஏஏஎஸ்) அமைப்பைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் ஜெய் சர்தார், ஜெய் பட்டிடார் எனக் கோஷம் எழுப்பினர். அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர். பிரதமர் நிகழ்ச்சியை முன்னிட்டு பிஏஏஎஸ் அமைப்பைச் சேர்ந்த 25 பேர் முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக கைது செய்யப் பட்டனர்.