

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பங்களா, சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை மத்திய அமைச்சர் மகேஷ் சர்மாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
2007-ம் ஆண்டு அப்துல் கலாம் தனது பதவிக்காலம் முடிந்த பிறகு, ராஜாஜி மார்கில் உள்ள இந்த பங்களாவில் வசித்து வந்தார்.
கலாமின் ராஜாஜி மார்க் பங்களாவை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததைப் பற்றி மகேஷ் சர்மா கூறும்போது, “பிரிட்டன் கட்டிடக் கலைஞர் லுத்யென் கட்டிய கட்டிடம் எதையும் நினைவு இல்லமாக மாற்றக் கூடாது என்பது அரசின் கொள்கை. அஜித் சிங் கூட அவரது மறைந்த தந்தை சரண் சிங்கின் துக்ளக் சாலை இல்லத்தை நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார், ஆனால் அது ஏற்கப்படவில்லை.
நான் 11 மாதங்களுக்குப் பிறகு அதிகாரபூர்வ தங்குமிடத்தை பெற்றுள்ளேன். முன்னதாக எனக்கு எண் 7, தியாக்ராஜ் மார்கில் இல்லம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அங்கு ஏற்கெனவே குடியிருந்தவர் காலிசெய்யவில்லை” என்றார் அமைச்சர் மகேஷ் சர்மா.
கலாம் வசித்த பங்களாவில் எண்ணற்ற புத்தகங்கள், அவருடைய வீணை ஆகியவை உள்ளன, இவற்றை அக்டோபர் 31-ம் தேதி ராமேஸ்வரத்தில் அவரது இல்லத்துக்கு கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது.