லோக்பால்: அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்தது சமாஜ்வாதி

லோக்பால்: அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்தது சமாஜ்வாதி
Updated on
1 min read

லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திமுக கட்சிகள் புறக்கணித்தன.

லோக்பால் மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விட்ட நிலையில், அதன் மீதான விவாதம் நாளை நடைபெற இருக்கிறது.இந்நிலையில், மசோதாவை நிறைவேற்றுவது குறித்து ஆராய மாநிலங்களவை தலைவர் ஹமீது அன்சாரி இன்று (திங்கள்கிழமை) அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்தக் கூட்டத்தில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திமுக தவிர மற்ற கட்சிகள் கலந்து கொண்டன. பகுஜன் சமாஜ் கட்சி ஏற்கனவே இம் மசோதாவுக்கு தனது ஆதரவை தெரிவித்து விட்டது. டெல்லியில் அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறுவதால், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளது.

சமாஜ்வாதி எதிர்ப்பு:

லோக்பால் மசோதாவுக்கு சமாஜ்வாதி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் சமாஜ்வாதி கட்சி லோக்பால் மசோதாவை ஆதரிக்க மறுப்பது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

லோக்பால் மசோதாவை ஆதரிக்க அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடப்பு கூட்டத் தொடரிலேயே லோக்பால் மசோதா நிறைவேற்றப் படும் என்றும் தேவைப்பட்டால் இதற்காக கூட்டத் தொடர் நீட்டிக்கப்படும் என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கமல் நாத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in