

அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று தாக்கும் 'தனுஷ்' ஏவுகணை ஒடிசா மாநிலம் சந்திப்பூர் அருகே இருந்து இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
ஒடிசா மாநிலம் பாலசோர் கடற்கரை பகுதியில் காலை 11.10 மணியளவில் கடற்படை கப்பலில் இருந்துதனுஷ் ஏவுகணை வெற்றிகரமாக இயக்கிப் பார்க்கப்பட்டது. தரையில் இருந்து தரை இலக்குகளை தாக்கும் பிருத்வி ஏவுகணைகளைப் போல, கடற்படைக்காக உருவாக்கப்பட்டது 'தனுஷ்' ஏவுகணை.
500 கிலோ முதல் 1000 கிலோ அளவுக்கு அணு ஆயுதம் மற்றும் வெடி குண்டுகளை தாங்கிச் சென்று கடல் மற்றும் கடல் சார்ந்த பகுதிகளில் உள்ள நில இலக்கை தாக்கும் திறன் கொண்டது தனுஷ்.
முற்றிலும் இந்திய ராணுவ தளவாடங்கள் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால் (டி.ஆர்.டி.ஓ.) தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை அவ்வப்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது.