Last Updated : 08 Apr, 2017 10:03 AM

 

Published : 08 Apr 2017 10:03 AM
Last Updated : 08 Apr 2017 10:03 AM

வங்கதேசத்துடன் 22 ஒப்பந்தங்கள் கையெழுத்து: தீஸ்தா நதிநீர் பங்கீடு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - பிரதமர் ஷேக் ஹசீனாவிடம் நரேந்திர மோடி உறுதி

டெல்லி வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா - பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் 22 ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாயின. ‘‘தீஸ்தா நதிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்’’ என்று பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, 4 நாள் அரசு முறைப் பயணமாக நேற்றுமுன்தினம் டெல்லி வந்தார். இந்நிலையில், பிரதமர் மோடியை டெல்லியில் நேற்று ஹசீனா சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து விரிவான ஆலோ சனை நடத்தினார். பின்னர் இரு தலைவர்கள் முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையில் அணுசக்தி, ராணுவ ஒத்துழைப்பு உட்பட பல்வேறு துறைகள் தொடர்பான 22 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

ஆனால், வங்கதேசத்துக்கும் மேற்கு வங்க மாநிலத்துக்கும் இடையில் கடந்த 7 ஆண்டுகளாக நிலவி வரும் தீஸ்தா நதிநீர் பங்கீடு குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. சிக்கிம் மாநிலத்தில் ஓடும் தீஸ்தா நதி மேற்குவங்கம் வழியாக வங்கதேசத்துக்கு செல்கிறது. பற்றாக்குறை காலங்களில் இந்நதி நீரை சரி பாதியாக பங்கிட்டு கொள்ள வேண்டும் என்று வங்கதேசம் வலியுறுத்தி வருகிறது. அப்படி செய்தால் மாநிலம் பாதிக்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

கடந்த 2011-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் வங்கதேச பயணம் மேற்கொண்டார். அப்போது தீஸ்தா நதிநீர் பங்கீடு தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்தது. ஆனால், அந்த ஒப்பந்தத்தால் மேற்கு வங்க மாநிலத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதனால் ஒப்பந்தம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், ஹசீனாவின் இந்தியப் பயணத்தின் போது நதிநீர் பங்கீடு பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படலாம் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், இந்தப் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. ஆனால், இந்தியா வங்கதேசம் இடையே நேற்று 22 ஒப்பந்தங்கள் கையெழுத்தான போது முதல்வர் மம்தா பானர்ஜியும் பங்கேற்றார். வங்கதேசம் மேற்குவங்கம் இடையே பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்துத் தொடர்பான ஒப்பந்தமும் அப்போது கையெழுத்தானது.

இதுகுறித்து பிரதமர் மோடி நேற்று கூறும்போது, ‘‘என்னுடைய விருந்தினராக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தீஸ்தா நதிநீர் பங்கீடு விஷயத்தில் விரைவில் தீர்வு கிடைக்கும் என்று உங்க ளுக்கும் (ஹசீனா) உங்கள் நாட்டு மக்களுக்கும் உறுதி அளிக்கிறேன்.

வங்கதேசத்துடனான தீஸ்தா நதிநீர் பங்கீடு விஷயத்தில் விரைவில் நல்லதொரு தீர்வு காணப்படும். தீஸ்தா நதிநீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் வங்கதேசம் இந்தியா ஆகிய இரு நாடுகளின் உறவுக்கு மிக முக்கியமானது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதில் இந்தியா முனைப்புடன் இருக்கிறது. என்னைப் போலவே மம்தா பானர்ஜியும் ஆர்வமுடன் இருக்கிறார்’’ என்றார்.

ஹசீனா கூறும்போது, ‘‘தீஸ்தா நதிநீர் பங்கீடு உட்பட எல்லா பிரச்சினைக்கும் விரைவில் தீர்வு கிடைக்க இந்தியாவின் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்’’ என்றார்.

500 மில்லியன் டாலர் கடன்

வங்கதேசத்துக்கு 500 மில்லியன் டாலர் கடன் அளிக்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது.

வங்கதேச பிரதமர் ஹசீனா, பிரதமர் மோடி முன்னிலையில் டெல்லியில் நேற்று 22 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின். அவற்றில் முக்கியமாக வங்கதேச அரசு ராணுவத்துக்குத் தேவையான உபகரணங்கள் வாங்க 500 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்கும் ஒப்பந்தமும் அடங்கும். ராணுவத்துக்காக கடன் வழங்கும் ஒப்பந்தம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.

தவிர வங்கதேசத்தில் உள்கட் டமைப்புப் பணிகள் மேற்கொள்ள 4.5 பில்லியன் டாலர் கடன் வழங்கவும் இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. இதன் மூலம் கடந்த சில ஆண்டுகளில் வங்கதேசத்துக்கு 8 பில்லியன் டாலர் அளவுக்கு இந்தியா கடனளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியா வங்கதேச நாடுகள் இணைந்து செயல்படவும் ஒப்புக் கொண்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x