

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்திலிருந்து தெலங்கானா பகுதி தனி மாநிலமாக உருவாக் கப்பட்டது. இதையடுத்து, ஆந்திர மாநில பிரிவினை மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது போல ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அம்மாநில மக்கள் கோரி வருகின்றனர்.
ஆனால், 14-வது நிதிக் குழு அறிக்கையின்படி மலைப்பிரதேச மாநிலங்களுக்குதான் சிறப்பு அந்தஸ்து வழங்க முடியும் என்றும், ஆந்திராவுக்கு அறிவித்தபடி சிறப்பு நிதி உதவி வழங்கப்படும் என்றும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சமீபத்தில் அறிவித்தார். இதற்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், காங்கிரஸ், ஜன சேனா, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களிலும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் மாநிலம் முழுவதும் வாகனப் போக்குவரத்து முடங்கியது. எனினும், சில அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. திருப்பதியில் இருந்து திருமலைக்கு பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.
போராட்டம் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பெரும்பாலான கடைகள் வணிக வளாகங்கள் மூடப்பட்டன. திரையரங்குகளில் காலை, மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாதவாறு பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டனர். இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதனிடையே நேற்று முன்தினம் இரவே போலீஸார் 144, 30 தடை உத்தரவு பிறப்பித்திருந்தனர். இதன் அடிப்படையில், மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நிர்வாகிகளை போலீஸார் நேற்று காலையிலேயே கைது செய்தனர்.
காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தேசிய நெடுஞ்சாலை களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களையும் போலீஸார் கைது செய்தனர். திருச்சானூரில் தனது வீட்டிலிருந்த முன்னாள் எம்எல்ஏவும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான கருணாகர் ரெட்டியை போலீஸார் காலை 4.50 மணிக்கு கைது செய்தனர். இதைக் கண்டித்து அக்கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த சாந்தி, காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்தார்.