

ஆள் கடத்தல் வழக்கில் சிக்கி பணி இடைநீக்கம் செய்யப்பட்ட கர்நாடகா காவல் துறை துணை கண்காணிப்பாளர் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரு மண்டல காவல் துறை துணை கண்காணிப்பாளராக பணியாற்றியவர் காளப்பா ஹன்டிபேக். தனது மகனை கடத்தி ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டுவதாக, காளப்பா மீது நிதி நிறுவன அதிபர் தேஜஸ் கவுடா கடந்த 28-ம் தேதி சிக்கமகளூரு காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். மேலும் இது தொடர்பான செல்போன் ஆடியோ ஆதாரத்தையும் வெளியிட்டார்.
இதையடுத்து கடந்த திங்கள்கிழமை காளப்பா ஹன்டிபேக் மீது ஆள் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பணி இடைநீக்கமும் செய்யப்பட்டார். இதையடுத்து காளப்பா தலைமறைவானார்.
பெலகாவியை அடுத்துள்ள மூர்கோட்டில் உள்ள தனது உறவினரின் வீட்டில் மறைந்திருந்த காளப்பா போலீஸார் தன்னை நெருங்கியதை அறிந்து நேற்று காலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.