Published : 11 Jul 2016 10:28 AM
Last Updated : 11 Jul 2016 10:28 AM

வங்கக் கடலில் 7 மீனவர்களை காப்பாற்றிய இந்தியாவின் கேப்டன் ராதிகா மேனன் சர்வதேச வீரதீர விருதுக்கு தேர்வு

சர்வதேச கடல்சார் அமைப்பின், வீரதீர செயலுக்கான விருதுக்கு இந்தியாவின் கேப்டன் ராதிகா மேனன் தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளார். சர்வதேச அளவில் இந்த விருதைப் பெறும் முதல் பெண் ராதிகாதான்.

சர்வதேச அளவில் தங்களது உயிரையும் பணயம் வைத்து கடல் பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபடுவோருக்கு சர்வதேச கடல்சார் அமைப்பு (International Maritime Organisation) ஆண்டு தோறும் வீரதீர விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த அமைப்பு ஐ.நா.வின் கட்டுப் பாட்டில் இயங்கி வருகிறது.

இந்த ஆண்டுக்கான வீரதீர விருதுக்கு இந்தியாவின் கப்பல் கேப்டன் ராதிகா மேனனின் பெயரை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை பரிந்துரை செய்திருந்தது. வங்கக் கடலில் கடந்த ஆண்டு ஜூன் 22-ம் தேதி கடும் மழை, பலத்த காற்றில் படகு இன்ஜின் பழுதானது. உணவு, தண்ணீர் இன்றி 7 மீனவர்கள் தத்தளித்தனர். மேலும் பலத்த காற்று, மற்றும் கடல் சீற்றத்தால் படகு மூழ்கும் நிலைக்கு உள்ளானது. மோசமான சூழ்நிலையில் அங்கு கப்பலில் விரைந்து சென்று 7 மீனவர்களையும் பத்திரமாக காப்பாற்றி கப்பலுக்கு அழைத்து வந்தார் ராதிகா மேனன். அந்த வீர செயலுக்காக அவர் பெயரை மத்திய அரசு பரிந்துரை செய்தது.

லண்டனில் விருது

இந்நிலையில், ஐஎம்ஓ கவுன்சிலின் 116-வது கூட்டம் லண்டனில் நடந்தது. அதில் ராதிகா மேனனுக்கு சர்வதேச வீரதீர விருது வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. வரும் நவம்பர் மாதம் 21-ம் தேதி லண்டனில் உள்ள ஐஎம்ஓ தலைமை அலுவலகத்தில் நடைபெறும் விழாவில், ராதிகாவுக்கு வீரதீர விருது வழங்கப்படுகிறது.

உலகளவில் இந்த விருது பெறும் முதல் பெண் ராதிகா என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x