சாலையில் சிறுநீர் கழித்ததைத் தட்டிக் கேட்டவர் அடித்துக் கொலை: டெல்லியில் நடந்த கொடூரம்

சாலையில் சிறுநீர் கழித்ததைத் தட்டிக் கேட்டவர் அடித்துக் கொலை: டெல்லியில் நடந்த கொடூரம்
Updated on
1 min read

சாலையில் இளைஞர்கள் இருவர் சிறுநீர் கழித்ததைத் தட்டிக் கேட்ட டெல்லி இ-ரிக்‌ஷா ஓட்டுநர் அடித்தே கொல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் ஜிடிபி மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே சனிக்கிழமை மாலை நடந்துள்ளது.

ரவிந்திர குமார் என்னும் 32 வயது இ-ரிக்‌ஷா ஓட்டுநர் சனிக்கிழமை மதியம் 1.30 மணிக்கு, மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகில் சிறுநீர் கழித்த இரு இளைஞர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்துப் பேசிய ரவிந்திர குமாரின் சகோதரர் விஜேந்திர குமார், ''அந்த இடத்தில்தான் இ-ரிக்‌ஷா ஓட்டுநர்கள் சாப்பிடுவர் என்றும், அங்கு சிறுநீர் கழிக்க வேண்டாம் என்றும் என் சகோதரர் கூறியுள்ளார். அதைக் கேட்க மறுத்த இளைஞர்கள் அவரைத் திட்டிவிட்டு, தகுந்த பாடம் கற்பிப்போம் என்று கூறிச் சென்றுள்ளனர்.

அதற்குப் பிறகு வீடு திரும்பிய ரவிந்திர குமார், மாலை 6.30 மணியளவில் மெட்ரோ ரயில் நிலையத்துக்குச் சென்றுள்ளார். இரவு சுமார் 8.30 மணிக்கு, இளைஞர்கள் இருவரும் சுமார் 8-10 நண்பர்களுடன் வந்துள்ளனர். அப்போது ரவிந்திர குமாரையும், உடனிருந்த நண்பரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இந்தக் காட்சிகள் அனைத்தும் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தன. அங்கிருந்து தப்பித்த என் தம்பியின் நண்பர், எங்களிடம் வந்து நடந்ததைக் கூறினார். சம்பவ இடத்துக்குச் சென்று பார்க்கும்போது, தம்பி மயங்கிக்கிடந்தார்.

உடனே அருகில் இருந்த மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றோம். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரின் உடல் முழுவதும் சிராய்ப்புகள் இருந்தன'' என்கிறார்.

கல்லூரிகளுக்கு குழுக்கள் அனுப்பப்பட்டன

சிசிடிவி காட்சிகள் மற்றும் விசாரணையின் மூலம் குற்றம்சாட்டப்பட்டவர்கள் டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய மூத்த காவல் அதிகாரி, ''சம்பவத்தைப் பார்த்த ரவிந்திர குமாரின் நண்பர் அளித்த தகவலின் அடிப்படையில், காவல் குழுக்கள் ஏராளமான கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன'' என்றார்.

ரவிந்திர குமாரின் நண்பர், சம்பந்தப்பட்ட இளைஞர்கள் இருவரையும் டெல்லி பல்கலைக்கழகத்தில் இறக்கிவிட்டதாகக் கூறியுள்ளார்.

கர்ப்பமாக இருந்த மனைவி

கொல்லப்பட்ட ரவிந்திர குமாருக்கு 1 வருடத்துக்கு முன்பு திருமணமாகியுள்ளது. அவரின் மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கும் சூழ்நிலையில் இத்தகைய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in