

இஸ்ரோ முதல்முறையாக சொந்தத் தொழில்நுட்பத்தில் தயாரித்த சி.இ-20 க்ரையோஜெனிக் இன்ஜின் சோதனை ஓட்டம் மகேந்திரகிரி திரவ திட்ட இயக்க நிலையத்தில் கடந்த 4-ம் தேதி வெற்றிகரமாக நடந்தது. இஸ்ரோவின் கனவுத் திட்டமான 640 டன் எடை கொண்ட ஜி.எஸ்.எல்.வி - எம்கே-3யை தாங்கிச் செல்லும் இன்ஜின் இது என்பதால் விஞ்ஞானிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ஜி.எஸ்.எல்.வி. செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான க்ரையோ ஜெனிக் இன்ஜின்களை ரஷ்யாவிடமிருந்து வாங்க இஸ்ரோ ஒப்பந்தம் செய்திருந்தது. அதன்படி ஏழு இன்ஜின்களையும் வாங்கியது. இடையே அமெரிக்காவின் நெருக்கடியால் ஒப்பந்தம் ரத்தானதாக கூறப்படுகிறது. அதனால், க்ரையோஜெனிக் இன்ஜின்களை இந்தியா சொந்த தொழில்நுட்பத்தில் தயாரிக்கத் தொடங்கியது.
அதன்படி ஏற்கனவே தயாரிக்கப்பட்ட க்ரையோஜெனிக் இன்ஜின் மூலம் ஜி.எஸ்.எல்.வி - டி5 செயற்கைக்கோள் வரும் ஜனவரி மாதம் ஏவப்படவுள்ளது.
இந்நிலையில், முதல்முறையாக அதிக எடை கொண்ட விண்கலமான (ராக்கெட் மொத்த எடை 640 டன், செயற்கைக்கோள் எடை 4.4 டன்) ஜி.எஸ்.எல்.வி - எம்கே-3யை தயாரிக்கும் பணிகளை இஸ்ரோ இரு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. மிகவும் சிக்கலானதும் சவாலானதுமான எம்கே-3 விண்கலம் இரண்டரை பாகங்களைக் கொண்டது.
இரு பக்கங்களிலும் தலா 200 டன் உந்துசக்தி கொடுக்கும் திட எரிபொருள் இன்ஜின், நடுவில் 110 டன் உந்துசக்தி கொடுக்கும் திரவ எரிபொருள் இன்ஜின் என இந்த விண்கலம் வடிவமைக்கப்படுகிறது. விண்கலத்தின் எடை அதிகம் என்பதால் அலைக்கற்றை பரிமாற்ற சாதனங்களை (Transponders) கூடுதலாக விண்ணுக்கு அனுப்ப முடியும். தொலை உணர்வு செயற்கைக்கோளான இது 36 ஆயிரம் கி.மீ. உயரத்தில் விண்ணில் நிலைநிறுத்தப்படும்.
அதிக எடை கொண்ட ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதென்றால், ரஷ்யாவிடமிருந்து வாங்கியதைவிட, இருமடங்கு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் கொண்ட க்ரையோஜெனிக் இன்ஜின் தேவை.
அதற்காக திருவனந்தபுரம் அருகே வலியமலாவில் இருக்கும் திரவ இயக்க திட்ட மையத்தில் கடந்த இரு ஆண்டுகளாக விஞ்ஞானிகளின் கடும் உழைப்பில் உருவானது தான் சி.இ-20 க்ரையோஜெனிக் இன்ஜின். இதன் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்த நிலையில், மகேந்திரகிரியில் கடந்த அக்டோபர் மாதம் முதல்கட்டமாக இன்ஜினை 3.5 வினாடிகள் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தினர். அதில் விஞ்ஞானிகள் முழு திருப்தி அடைந்தனர்.
தொடர்ந்து, இன்ஜினின் மிக முக்கியப் பகுதியான Thrust chamber எனப்படும் இன்ஜின் நாசிலில் திரவ ஹைட்ரஜனும் திரவ ஆக்ஸிஜனும் சீராக சப்ளையாகி, நிலைநின்று எரிகிறதா என்கிற சிக்கலான சோதனை ஓட்டம் கடந்த டிசம்பர் 4-ம் தேதி மொத்தம் 20 வினாடிகள் நடத்தப்பட்டது.
பெரும்பாலான நாடுகளில் இதுபோன்ற க்ரையோஜெனிக் இன்ஜின் தயாரிப்பின் முதல் சோதனைகள் இயக்கம் தோல்வியடைந்து வருகின்றன. ஆனால், இஸ்ரோவில் முதல் முயற்சியிலேயே இச்சோதனை இயக்கம் முழு வெற்றி பெற்றதால், விஞ்ஞானிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதனால், 2018 முதல் 2020-க்குள் விண்ணில் ஏவ திட்டமிட்டிருக்கும் ஜி.எஸ்.எல்.வி - எம்கே-3 செயற்கைக்கோள் அதற்கு முன்னதாகவேகூட விண்ணில் ஏவப்படலாம் என்று தெரிகிறது.