

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியை விட சிறப்பாக சேவை செய்வோம் என்று நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அளித்த சமிக்ஞை காரணமாக பெரும் கார்பரேட் மற்றும் தொழில் நிறுவனங்கள் அக்கட்சிக்கு பின்னால் அணி திரண்டுள்ளன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் குற்றம் சாட்டினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில பிளீனம் ஆலோசனைக் கூட்டம் பாலக்காட்டில் நேற்று தொடங்கியது. 3 நாள் நடைபெறும் இந்தக் கூட்டத்தை தொடங்கிவைத்து பிரகாஷ் காரத் பேசியதாவது: காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளுக்கு எதிரான போரை இடதுசாரிகள் மட்டுமே முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று மக்கள் நம்புகின்றனர். இதனால் இக்கட்சிகளை எதிர்ப்பதையே நோக்கமாக கொண்டுள்ளோம். நாட்டில் உள்ள பெரிய கார்பரேட் மற்றும் தொழில் நிறுவனங்கள் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய ஆதரவு அளிக்கின்றன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் கட்சியை விட உங்களுக்கு சிறப்பாக சேவை செய்வோம் என்று பாஜக தெளிவான சமிக்ஞை அளித்துள்ளதே இதற்கு காரணம்.
கடந்த ஓராண்டில் நாட்டின் பல்வேறு இடங்களில் பதற்றமும், கலவரமும் உருவாகும் வகையில் திட்டமிட்டு மதவாத பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. பாஜக மற்றும் நரேந்திர மோடிக்கு தேர்தல் ஆதாயம் கிடைக்கும் வகையில் இவை திட்டமிட்டு உருவாக்கப்பட்டன.
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தாராளமயக் கொள்கைகளால் நாட்டில் விலைவாசி அதிகரித்துள்ளதுடன் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. பாஜகவின் மதவாத கொள்கைகளுக்கு எதிராகவும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஊழல் கறை படித்த கொள்கைகளுக்கு எதிராகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மக்களவை தேர்தலை சந்திக்கும்.
அமெரிக்காவின் நெருக்குதலுக்கு அடிபணிந்து மன்மோகன் சிங் அரசு ஈரானுக்கு ஆதரவளிக்க மறுத்ததால் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு நாடு அதிகம் செலவிட நேரிட்டது. ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு குழாய் வழியாக இயற்கை எரிவாயு கொண்டு வரும் திட்டத்துக்கு அமெரிக்க நெருக்குதல் காரணமாகவே மத்திய அரசு முனைப்பு காட்டவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர், என்றார் பிரகாஷ் காரத் கூறினார்.
கட்சியின் பலவீனங்களை கண்டறியவும், அவற்றை களையவும், கட்சியை அமைப்பு ரீதியாக வலுப்படுத்தவும் இக்கூட்டம் நடத்தப்படுகிறது.
சீத்தாராம் யெச்சூரி, எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை உள்பட கட்சி யின் 6 பொலிட் பீரோ உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.