

உ.பி.யில் இந்திய விமானப் படையின் (ஐஏஎப்) ஹெலிகாப்டர் ஒன்று நேற்று பயிற்சியின்போது விழுந்து நொறுங்கியது. இதில் இரு விமானிகள் உயிர் தப்பினர்.
உ.பி.யின் அலகாபாத் நகரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் பாம்ரவுலி என்ற இடத்தில் ஐஏஎப் மத்திய மண்டல தலைமை அலுவலகம் உள்ளது. இங்குள்ள விமான தளத்தில் இருந்து நேற்று காலை 2 விமானிகள் வழக்கமான பயிற்சிக்காக செடாக் ரக ஹெலிகாப்டரில் புறப்பட்டனர்.
இந்நிலையில் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அதை வயலில் தரையிறக்க விமானிகள் முயன்றனர். ஆனால் நிலப்பரப்பு சமமாக இல்லாததால் ஹெலிகாப்டர் கவிழ்ந்து நொறுங்கியதாக விமானப் படை கூறியுள்ளது.
முன்னதாக 2 விமானிகளும் ஹெலிகாப்டரில் இருந்து குதித்து உயிர் தப்பினர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.