

பிரதமர் நரேந்திர மோடி அரசின் சாதனைகளை தென்னிந்தியாவில் பறைசாற்றும் முயற்சியாக, பிராந்திய நாளிதழ் ஆசிரியர்கள் மாநாடு சென்னையில் செப்டம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பத்திரிகை தகவல் மையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சமூக நாளிதழ்கள் மாநாடு நடத்தப் படுவது வழக்கம். இந்த மாநாடு தேசிய அளவில் டெல்லியில் நடைபெறும். பெரும்பாலும் சம்பிரதாயமாக நடத்தப்படும் இந்த மாநாடு மோடியின் ஆட்சியில் புதிய பரிணாமம் எடுத்துள்ளது.
தென்னிந்திய பத்திரிகை ஆசிரியர்களுக்காக, செப்டம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் பிராந்திய நாளிதழ் ஆசிரியர்கள் மாநாடு சென்னையில் நடைபெறுகிறது. இதில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மற்றும் லட்சத் தீவுகள் ஆகிய வற்றில் இருந்து நாளிதழ்களின் ஆசிரியர்கள் கலந்து கொள்கின் றனர். இவர்களை மத்திய அமைச்சர் கள் தனியாக சந்தித்து, பிரதமர் மோடி அரசின் சாதனைகளை எடுத்துக் கூற உள்ளனர்.
இம்மாநாட்டை மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு தொடங்கி வைக்கிறார். மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மத்திய கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட பத்துக்கும் மேற்பட்ட முக்கிய துறைகளின் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதில் பல்வேறு துறைகள் சார்பில் அதன் அமைச்சர்கள் தலைமையில் தனியாக அமர்வுகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்துடன் மத்திய அரசின் திட்டங்கள் அமல்படுத்தப்படுவதை அந்த இடத்துக்கே அழைத்துச் சென்று விளக்கவும் உள்ளனர்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் மத்திய தகவல் தொடர்பு அமைச்சக அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, “மத்திய அரசின் சாதனைகள் குறித்த செய்திகளை, பல்வேறு மொழி மற்றும் பிராந்திய நாளிதழ்களிலும் பரவச்செய்யும் முயற்சி இது. மாநாட்டுக்கு வரும் நாளிதழ் ஆசிரியர்களிடம் மத்திய அரசின் செயல்பாடுகள் பற்றிய கருத்துகளையும் கேட்க இருக்கிறோம். இந்த கூட்டத்தின் மூலம், அரசுக்கும் பிராந்திய மொழி பத்திரிகை ஆசிரியர்களுக்கும் உள்ள இடைவெளியை களைய முயற்சிக்கப்படும்” என்று தெரிவித்தனர்.
பிரதமராக மோடி பதவியேற்ற பிறகே ‘பிராந்திய நாளிதழ் ஆசிரியர்கள் மாநாடு’ நடத்தும் வழக்கம் தொடங்கியது. இதன் முதல் மாநாடு ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் கடந்த பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்நிலையில் மோடியின் ஆட்சியில் நடைபெறும் இரண்டாவது மாநாடு இது.
முதல் மாநாட்டையே சென்னையில் நடத்த முயற்சிக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு இந்த முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் சென்னையில் கனமழை, வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக இந்த முயற்சி கைவிடப்பட்டது.
செப்டம்பரில் சென்னையில் நடைபெறவுள்ள மாநாட்டை முதல் முறையாக பிரதமர் அலுவலகம் மேற்பார்வையிட்டு வருகிறது. சென்னை மாநாட்டில் சுமார் நூறு பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.