

கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் இன்று (செவ்வாய்கிழமை) பதவி யேற்கிறார். இதையடுத்து தனது பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை நேற்று அவர் ராஜினாமா செய்தார். 15 நாளில் சட்டப்பேரவையில் பெரும் பான்மையை நிரூபிக்கும்படி பாரிக்க ருக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பாஜக 13 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 17 இடங்களை கைப்பற்றியது. இதனால் கோவாவில் சிறிய கட்சிகளின் ஆதரவை பெற பாஜகவும், காங்கிரஸும் முயன்றன. ஒரு கட்டத்தில் இரு சுயேச்சைகள், கோவா பார்வர்டு, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி ஆகியவை பாஜகவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்தன. ஆனால் மனோகர் பாரிக்கர் முதல்வர் பதவியை ஏற்க வேண்டும் என நிபந்தனை விதித்தன. இதற்கு பாஜக மேலிடமும் சம்மதம் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து பாஜகவின் 13 எம்எல்ஏக் களும், ஆதரவு அளிப்ப தாக உறுதியளித்த பிற எம்எல்ஏக்களும் நேற்று முன்தினம் மாலை ஆளுநர் மிருதுளா சின் ஹாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். இதையடுத்து மனோகர் பாரிக்கரை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். மேலும் முதல் வராக பதவியேற்ற நாளில் இருந்து 15 நாட்களுக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் பாரிக்கருக்கு ஆளுநர் உத்தரவிட்டார். இதன்பின் மனோகர் பாரிக்கர் தனது பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் நேற்று ஏற்றுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து மனோகர் பாரிக்கர் இன்று மாலை 5 மணிக்கு முதல்வராக பதவி யேற்கிறார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மனோகர் பாரிக்கர் ‘‘பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். கோவா முதல்வராக அமைச்சர்களுடன் நாளை மாலை (இன்று) பதவியேற் கிறேன்’’ என்றார்.
அமைச்சரவையில் எத்தனை அமைச்சர்கள்பதவியேற்கவுள்ளனர் என கேட்டதற்கு அவர், ‘‘அமைச்சரவை தொடர்பான முடிவு இறுதி செய்யப்பட்டவுடன் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படும்’’ என்றார்.
மத்திய அமைச்சராக பணியாற்றிய அனுபவம் குறித்து பேசிய பாரிக்கர், ‘‘ஆரம்பத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சராக பணியாற்றுவதில் சில சிரமங்களை சந்தித்தேன். பின்னர் அதனை சமாளித்து கடந்த இரண்டரை ஆண்டுகளாக எனது பணியை சிறப்பாக செய்தேன். நேர்மை தவறாமல் எனது பணிகளை முடித்திருக்கிறேன். பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவி வகிப்பவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டரை ஆண்டுகளில் ராணுவத்துக்காக பல்வேறு ஆயுதங்கள் கொள்முதல் செய்தபோதிலும், என் மீதோ, எனது அமைச்சகத்தின் மீதோ எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டும் எழுந்ததில்லை. பாதுகாப்பு அமைச்சராக நான் என்ன சாதித்தேன் என்பதை விவரிக்குமாறு யாராவது கேட்டால், படை வீரர்களுக்கு ஊக்கம் அளித்தது, சிறப்பான முறையில் ஆயுதங்களை கொள்முதல் செய்தது உள்ளிட்ட விவரங்களை பட்டியலிடுவேன்’’ என்றார்.
மும்பை ஐஐடி.யில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்துள்ள பாரிக்கர் (61), 2012 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை வெற்றி பெற வைத்து முதல்வராக பொறுப்பேற்றார். பின்னர் 2014-ல் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராக சேர்த்துக் கொள்ளப்பட்டார். இதனால் லஷ்மிகாந்த் பர்சேகர் கோவாவின் புதிய முதல்வரானார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மந்த்ரெம் தொகுதியில் போட்டி யிட்ட பர்சேகர் தோல்வியடைந்தார். அவரது அமைச்சரவை சகாக்களும் வெற்றி பெற தவறிவிட்டனர். இதனால் கைநழுவும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள மனோகர் பாரிக்கரை மீண்டும் மாநில அரசியலுக்கே, பாஜக மேலிடம் அனுப்பி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
பாரிக்கர் இதற்கு முன்பு 2000 முதல் 2002 வரையிலும், பின்னர் 2002 முதல் 2005 வரையிலும் கோவா முதல்வராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரவாதி கோமந்தக், கோவா பார்வர்டு கட்சி எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக பாஜக உறுதியளித்ததன் பேரில், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலம் பெறப்பட்டுள்ளது. இன்று முதல்வராக பதவியேற்கும் பாரிக்கருடன் கோவா பார்வர்டு மற்றும் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியில் இருந்து தலா இருவர் அமைச்சராக பொறுப்பேற்கின்றனர். இதே போல் இரு சுயேச்சைகளும் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர். பாஜகவில் 2 அல்லது 3 பேர் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள். அதன்படி 8 அல்லது 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர். இந்தத் தகவலை கோவா மாநில பாஜக தலைவர் விஜய் டெண்டுல்கர் உறுதி செய்துள்ளார். மேலும் அவர், ‘‘பாஜக எம்எல்ஏக்களில் தற்போதைய துணை முதல்வர் பிரான்சிஸ் டிசோஸாவும், மற்றொரு எம்எல்ஏவும் அமைச்சராக பதவியேற்கவுள்ளனர். அவரது பெயர் நாளை (இன்று) காலை அறிவிக்கப்படும்’’ என்றார்.