

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க பாஜக முயற்சித்து வருவதாக தமிழக அரசியல் நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
மேலும் தமிழக முதல்வர் பதவியேற்பு விழாவை ஆளுநர் தாமதிக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது. டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, "தமிழக முதல்வர் பதவியேற்பு விழாவை ஆளுநர் தாமதிக்கக்கூடாது. இது மிகவும் தவறானது மட்டுமல்ல, அரசியல் சாசன சட்டங்களுக்கு விரோதமானதும்கூட.
குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதுபோல் தமிழக அரசியல் நிலவரம் சிக்கலில் இருக்கும் நேரத்தில் ஆதாயம் தேட முற்படுகிறது பாஜக. தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யா சாகர் ராவ் தமிழகத்துக்கு செல்ல வேண்டுமா கூடாதா என்பது குறித்து மத்திய அரசு எந்தவிதத்திலும் தலையிடக்கூடாது.
ஆளுநரும் பதவியேற்பு விழாவை தாமதிக்கக்கூடாது. ஓ.பன்னீர்செல்வமோ அல்லது சசிகலாவோ இருவரில் யாரேனும் ஒருவர் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டால் ஆளுநர் சற்றும் தாமதிக்காமல் அடுத்த நிமிடமே பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும்" என்றார்.