

உத்தரப் பிரதேசத்தில் குண்டர்கள் ஆட்சி நடைபெறுவதாக முதல்வர் அகிலேஷ் யாதவ் மீது மறைமுகமாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டி உள்ளார்.
பதேபூரில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி பேசியதாவது:
மாநிலம் முழுவதும் குண்டர்கள் ஆட்சி நடைபெறுகிறது. காவல் நிலையங்கள் அனைத்தும் ஆளும் சமாஜ்வாதி கட்சியின் அலுவலகமாக மாறி உள்ளன. பொதுமக்களின் புகார்கள் பதிவு செய்யப்படுவதில்லை. சட்டம் ஒழுங்கை மேம்படுத்துவதில் அரசு போதிய கவனம் செலுத்த வில்லை.
குறிப்பாக, பாலியல் புகாரில் (தாயும் மகளும் பலாத்காரம் செய்யப்பட்ட) சிக்கிய அமைச்சர் காயத்ரி பிரசாத் பிரஜாபதி மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த சம்பவம் நடந்து பல மாதங்கள் ஆன நிலையில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகே புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டுமானால் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்.
தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அகிலேஷ் யாதவின் முகத்தில் உற்சாகம் குறைந்துவிட்டது. அவருடைய குரலில் வலு குறைந்து வருகிறது. தேர்தல் பயம் தொற்றிக்கொண்டதால் ஊடகங் களிடம் பேசும்போது வார்த்தையில் தடுமாற்றம் ஏற்படுகிறது.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்ததன் மூலம் சோஷலிஸ தலைவர் ராம் மனோகர் லோகியாவை சமாஜ்வாதி கட்சி அவமானப்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் தங்களுக்கு சாதகமான சூழல் இல்லை என்பதை உணர்ந்த ஒருவர் (ராகுல் காந்தி) சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார்.
மாநிலத்தில் பாஜக ஆட்சி முடிவுக்கு வந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அதன் பிறகு இங்கு வளர்ச்சிப் பணிகள் எதுவுமே நடக்கவில்லை. எனவே, மீண்டும் வளர்ச்சிப் பணிகள் நடைபெற வேண்டுமானால் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.