முஸாபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் சந்தித்தனரா?- கைதான தீவிரவாதிகளின் வாக்குமூலத்தால் சர்ச்சை

முஸாபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை  லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் சந்தித்தனரா?- கைதான தீவிரவாதிகளின் வாக்குமூலத்தால் சர்ச்சை
Updated on
2 min read

டெல்லி சிறப்புப் போலீஸாரால் தீவிரவாதிகள் என கைது செய்யப்பட்டவர்கள், முஸாபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களைத் தொடர்பு கொள்ள முயன்றோம் என வாக்குமூலம் அளித்ததாக செய்தி வெளியானது. இதனால், முஸாபர் நகர் கலவரம் தொடர்பாக மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

ஹரியாணா மாநிலம் மேவாட் மாவட்டத்தின் நூ பகுதியில் ஹபீஸ் முகம்மது ரஷீத் மற்றும் முகம்மது ஷாஹீத் என்ற இரு முஸ்லிம் மௌலானாக்கள் சில வாரங்களுக்கு முன் டெல்லியின் சிறப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்தவர்கள் அவர்கள், டெல்லியில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இருவரும் கடந்த திங்கள் கிழமை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, ‘முஸாபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களைத் தொடர்பு கொள்ள முயன்றதாக வாக்குமூலம் அளித்ததாக செய்தி வெளியானது.

பாஜக கருத்து

இதுகுறித்து பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், ‘பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள் எந்த அளவுக்கு உத்தரப்பிரதேசத்தில் காலூன்றியுள்ளன என்பதையே இது காட்டுகிறது.

நம் தேசிய பாதுகாப்பு பிரச்சனையான இதில், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்திய அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளன. இதுவரை எவரும் கைது செய்யப்படாமல் இருப்பதை ஏற்க முடியாது’ என்றார்.

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இதே தகவலைக் குறிப்பிட்டிருந்தார்.

இதை சுட்டிக் காட்டிய ஜாவேத்கர், ‘அவர் பேசிய பிறகு அதில் என்ன நடவடிக்கை இதுவரை எடுக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்.’ என வலியுறுத்தினார்.

காங்கிரஸ் பதில்

மத்திய அமைச்சர் மணிஷ் திவாரி கூறுகையில், “பிரிவினைவாத அரசியல், மதவாத அரசியல் ஆகியவற்றை நம்புவோர், தாம் இந்தியாவிற்கு ஏற்படுத்தும் பாதிப்பை உணர வேண்டும்.’ எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறுகையில், ‘ராகுல் காந்தி அன்று சொன்னது இப்போது உண்மையாகி உள்ளது. இதுபோன்ற பதட்டமான விஷயங்களை மிகக் கவனமாகக் கையாள வேண்டியது அவசியம்” என்றார். சமாஜ்வாடியின் மூத்த தலைவரான நரேஷ் அகர்வால் கூறுகையில்,

‘இது குறித்து டெல்லி போலீஸார் உத்தரப்பிரதேச அரசுக்குத் தகவல் அளிக்க வேண்டும். உத்தரப்பிரதேச அரசு இது தொடர்காகக் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

உள்துறை மறுப்பு

முஸாபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை, டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் தொடர்பு கொண்டதாக வெளியான செய்தியை டெல்லியின் சிறப்பு போலீஸ் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியவை மறுத்துள்ளன.

டெல்லி சிறப்பு காவல்துறை ஆணையர் எஸ்.என்.வாத்சவா கூறுகையில், “டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்ட இருவரும் தியேபந்தில் உள்ள லியாகத் மற்றும் ஜமீர் எனும் இருவரை மசூதி கட்டுவதற்கு நிதி கேட்டு சந்தித்துள்ளனர்” என்றார்.

மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி கூறுகையில், “பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் முஸாபர் நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களைச் சந்தித்ததாகக் கூறப்படுவதற்கு எவ்வித ஆதாரமோ, உளவுத்துறை தகவல்களோ இல்லை. ஆனால், டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் முஸாபர்நகரில் இருவரைச் சந்தித்துள்ளனர். அவர்கள் இருவருக்கும் வன்முறைச் சம்பவத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை” என்றார்.

கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஒரு இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு முஸாபர்நகர் கலவரம் ஏற்பட்டது. இதில், சுமார் 60 பேர் கொல்லப்பட்டதுடன் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் தங்கள் கிராமங்களை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று.

இதையடுத்து, கடந்த அக்டோபரில் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல், முஸாபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர்களை ஐ.எஸ்.ஐ, அணுகுவதாகத் தெரிவித்தார்.

ராகுலின் இக்கருத்து தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in