

அவதூறு வழக்கு தொடர்வதன் மூலம் எங்களை அச்சுறுத்த முடியாது என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் இன்று வெளியிட்ட பதிவில், "மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு மூலம் எங்களை யாரும் அச்சுறுத்த முடியாது. ஊழலுக்கு எதிரான எங்களின் போராட்டம் தொடரும்.
டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் குறித்து கமிஷன் அமைத்துள்ளோம். அந்த கமிஷனின் விசாரணைக்கு அருண் ஜேட்லி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அவர் நிரபராதியா என்பதை அவரே நிரூபிக்க வேண்டும்" என்று கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தன் மீது தவறான அவதூறு பரப்பும் குற்றச்சாட்டுகளை சுமத்தியதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உட்பட ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 6 பேர் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
மேலும், டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (டிடிசிஏ) ஊழல் விவகாரத்தில், போலியான குற்றச்சாட்டுகளை சுமத்தி தன் மீது அவதூறு பரப்பியதற்காக ரூ.10 கோடி இழப்பீடு தர வேண்டும் எனவும் ஜேட்லி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.