

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் அருகே உள்ள ரெவாரா என்ற கிராமத்தில் பெரிய அளவில் பசுக்கள் கொல்லப்பட்டதாக வந்த புகார்களை அடுத்து போலீஸார் 12 பேரைக் கைது செய்தனர். இதனையடுத்து பசுப ்பாதுகாப்பு அமைப்பினர் கிராமத்தில் புகுந்து ரகளையில் ஈடுபட்டு வீடுகளை சூறையாடினர்.
மாடுகள் பெரிய அளவில் கொல்லப்படுவதாக எழுந்த புகார்களை அடுத்து ரெவாரா கிராமத்தில் அதிரடி சோதனைக்காக நுழைந்த போலீஸார் 12 பேரைக் கைது செய்தனர். சுமார் 36 எருதுகளின் உடல்களைக் கைப்பற்றியதோடு 6 பசுக்களையும் மீட்டதாக போலீஸ் தரப்பு கூறுகிறது.
ஆனால் ரெவாரா கிராம மக்களோ, போலீஸார் கைதுக்குப் பிறகு நூற்றுக்கணக்கான வலதுசாரிகள் பயங்கர ஆயுதங்களுடன் கிராமத்தில் வியாழன் காலை நுழைந்து தங்களை அடித்து உதைத்ததாகவும் வீடுகளை சூறையாடியதாகவும் தங்களை வீடுகளை விட்டு விரட்டியடித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, வலதுசாரி அமைப்பினர் காலையில் கிராமத்திற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர். கிராம மக்களிடையே ஒரு பயங்கர பீதி நிலவியது. சிலர் வயல்களில் ஒளிந்து கொண்டனர், பலர் தங்கள் உறவினர் வீட்டுக்குத் தப்பிச் சென்றனர். சிலர் உணவும் குடிநீரும் இன்றி தவித்து வருகின்றனர். .
ஈத் பண்டிகை முடிந்து தான் பணிக்குத் திரும்ப வேண்டிய நிலையில், இந்தத் தாக்குதலால் தனது குடும்பத்தின் பாதுகாப்பு கருதி தங்கி விட்டதாகத் தெரிவித்தார்.
பசுவதைக்கு எதிராக போலீஸ் நடவடிக்கைக்கு தாங்கள் எதிரிகள் அல்ல என்றும், வலதுசாரி அமைப்பினர் அப்பாவி மக்களை தாக்குவதுதான் தங்கள் எதிர்ப்புக்குக் காரணம் என்றும் கிராமத்தினர் தெரிவித்தனர். இவை எல்லாமே போலீஸ் கண்முன்னே நடந்தது. குற்றவாளிகளைப் பிடிக்க நாங்கள் போலீஸுக்கு உதவத் தயாராக இருக்கிறோம். ஆனால் அப்பாவி கிராம மக்களை வலதுசாரிகள் தாக்க அனுமதிக்கக் கூடாது என்று கிராமத்தினர் கூறுகின்றனர்.
இது குறித்து ராம்கார் எம்.எல்.ஏ. ஞான்தேவ் அஹுஜாவை தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் தொடர்பு கொண்டு கேட்டபோது, “நானே நேரில் அந்தக் கிராமத்தில் அப்போது இருந்தேன். கிராமத்தினர் ஒருவரைக் கூட நாங்கள் தொடவில்லை. அவர்கள் ஓடினார்கள் காரணம் அவர்கள் குற்றம் செய்துள்ளனர். நாங்கள் பசுக்களின் எலும்புகள், கயிறுகள், நுகத்தடிகளைக் கண்டோம். 40 வீடுகள் கிராமத்தில் உள்ளன, 36 உடல்களை நாங்கள் கைப்பற்றினோம்” என்று வலதுசாரி அமைப்பினர் வன்முறைகளை கடுமையாக மறுத்தார்.