

தெற்கு டெல்லியில் கடந்த 29ம் தேதி அருணாசலப் பிரதேச எம்எல்ஏவின் மகன் நிடோ டானியா (19) கடைக்காரர்கள் சிலரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் விரைந்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே உறுதி கூறினார்.
அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்தவரும், மத்திய சிறுபான்மை யினர் நலத்துறை இணை அமைச்சருமான நினோங் எரிங் தலைமையில் அம்மாநில மாணவர்கள் பலர் ஷிண்டேவை நேற்று சந்தித்து சுமார் 20 நிமிடம் பேசினர்.
அப்போது அவர்களிடம், “இச்சம்பவத்தில் விரைவான விசாரணை மேற்கொள்ளப்படும், குற்றவாளிகள் தண்டிக்கப்படு வார்கள்” என்று ஷிண்டே உறுதி கூறியதாக நினோங் எரிங் பின்னர் நிருபர்களிடம் கூறினார்.
“வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும். இச்சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய டெல்லி போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றும் ஷிண்டேவிடம் வலியுறுத்தினோம் என்றார் நினோங் எரிங்.
சம்பவ பின்னணி
அருணாசலப்பிரதேச எம்எல்ஏ ஒருவரின் மகனான நிடோ டானியா டெல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாமாண்டு படித்துவந்தார். இவர் கடந்த 29ம் தேதி தெற்கு டெல்லி லஜ்பத் நகரில் தனது ஹேர் ஸ்டைலை கேலி செய்த கடைக்காரர்களை கண்டித்துள்ளார். இதையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்துக்குப் பிறகு கடைக்கார்களால் தாக்கப்பட்டுள்ளார். போலீஸாரால் மீட்கப்பட்டு விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் மறுநாள் காலை படுக்கையில் இறந்து கிடந்தார்.