

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு குறித்து எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் விவாவதத்துக்குத் தயார் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு அம்மாநில மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா சவால் விடுத்தார்.
தேசிய மாநாட்டு கட்சியின் நிறுவனர் ஷேக் முகமது அப்துல்லாவின் 108-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, இது குறித்து ஸ்ரீநகரில் இன்று (வியாழக்கிழமை) நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசும்போது, " ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பற்றி எதுவுமே தெரியாதவர்கள், அதுகுறித்து கருத்து தெரிவித்திருப்பது ஆச்சரியமாக உள்ளது.
அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை படிக்காமலேயே அதுகுறித்து பேசுகிறார்கள். இந்தப் பிரிவில் சொத்துரிமை பற்றியோ குடியுரிமை சட்டம் பற்றியோ குறிப்பிடவில்லை. இந்தப் பிரிவு, காஷ்மீர் மாநிலத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்க வகை செய்கிறது. 370-வது பிரிவை விமர்சித்தவர்கள் யார் என்பதும், அதனால் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் எங்களுக்குத் தெரியும்.
இந்தப் பிரிவு குறித்து என்னுடன் விவாதம் நடத்த விரும்பினால், எங்கே, எப்போது என்பதைத் தெரிவிக்க வேண்டும். எந்த நேரத்திலும் அகமதாபாதில் விவாதம் நடத்தினாலும் பங்கேற்கத் தயார். ஜம்மு காஷ்மீர் மக்களைப் பற்றி முழுமையாக தெரியாதவர்கள் நாட்டின் உயர் பதவியைக் கைப்பற்ற கனவு காண்பது மேலும் ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது.
ஜம்முவில் சமீபத்தில் பேசிய ஒரு தலைவர் குஜ்ஜார்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகக் கூறியுள்ளார். ஆனால் குஜ்ஜார் வகுப்பினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ள ஒரே மாநிலம் காஷ்மீர்தான்" என்றார் ஒமர். சமீபத்தில் காஷ்மீருக்கு சென்றிருந்த நரேந்திர மோடி, 370-வது பிரிவால் காஷ்மீர் மக்கள் பயனடைவதாக இருந்தால், அதுகுறித்து விவாதத்துக்குத் தயார் என கூறியிருந்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் ஒமர் இவ்வாறு கூறியுள்ளார்.