‘ஏர் இந்தியா’ பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை கொள்கை அளவில் ஒப்புதல்

‘ஏர் இந்தியா’ பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை கொள்கை அளவில் ஒப்புதல்
Updated on
1 min read

அதிக கடன் சுமையில் இருக்கும் ‘ஏர் இந்தியா’வின் பங்குகளை விற்பதற்கு மத்திய அமைச்சரவை கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கி இருக்கிறது. அமைச்சரவை கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இதனைத் தெரிவித்தார்.

இதற்காக நிதி அமைச்சர் தலைமையில் பிரத்யேக குழு அமைக்கப்படும். இந்த குழு பங்குகளை விற்பதற்கான காலத்தையும் வழிமுறைகளையும் உருவாக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இம்மாத தொடக்கத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உதவியுடன் டாடா குழுமம் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவதாக செய்திகள் வெளியாகின. ரூ.52,000 கோடி அளவுக்கு ஏர் இந்தியாவின் கடன் இருக்கிறது. மொத்த உள்நாட்டு சந்தையில் இந்த நிறுவனம் 14 சதவீத சந்தையை வைத்திருக்கிறது.

‘ஏர் இந்தியா’ நிறுவனத்துக்கு 140 விமானங்கள் உள்ளன. உள்நாட்டில் 72 நகரங்களையும், 41 சர்வதேச நகரங்களையும் இணைக்கிறது. மும்பையில் 32 ஏக்கர் நிலம் இருக்கிறது. இது தவிர டெல்லி, ஹாங்காங், லண்டன், நைரோபி, ஜப்பான் மற்றும் மொரிஷியஸ் ஆகிய பகுதிகளிலும் சொத்துகள் உள்ளன.

ஜேட்லி கூறும்போது, “எவ்வளவு பங்குகளை விற்பது, ஏர் இந்தியாவின் சொத்துக்கள், கடன்கள், மற்றும் அதன் ஹோட்டல் கிளை ஆகியவை குறித்து முடிவெடுக்கவுள்ளோம்” என்றார்.

மத்திய அரசு சார்பான நிபுணர் குழுவான நிதி ஆயோக் மற்றும் நிதியமைச்சகம் அரசு முழு பங்குகளையும் விற்க வேண்டும் என்ற முடிவை ஆதரிக்க வான்வழிப் போக்குவரத்து அமைச்சகம் மத்திய அரசு சிறிய அளவிலாவது பங்குகளை வைத்திருக்க வேண்டும் என்று கருதுகிறது.

ஏர் இந்தியா நிறுவனம் 1932-ல் ஜே.ஆர்.டி. டாடாவினால் டாடா ஏர்லைன்ஸ் என்று தொடங்கப்பட்டதாகும். இது 1946-ல் பொதுத்துறை நிறுவனமானது. பிறகு 1953-ல் ஏர் இந்தியா தேசியமயமாக்கப்பட்டது.

ஏர் இந்தியாவை தனியார்மயப்படுத்தும் யோசனையை 2000-ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முன் வைத்தது. இந்தியன் ஏர்லைன்ஸிலிருந்து 51% பங்குகளையும் ஏர் இந்தியாவிலிருந்து 60% பங்குகளையும் விற்க அப்போது தேஜகூ அரசு பரிசீலித்தது. ஆனால் அமைச்சக மட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியதால் அது கிடப்பில் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in