

மத்தியப்பிரதேச மாநிலம், மாண்டசர் ரயில் நிலையத்தில் பசு இறைச்சி வைத்திருந்ததாக கூறி, இரு முஸ்லிம் பெண்கள் போலீஸார் முன்னிலையில் தாக்கப்படும் அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
குஜராத்தில் பசுவின் தோலை உரித்ததாக கூறி 4 தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழ்ந்துள்ளது.
இப்பெண்கள் ஜவோரா என்ற இடத்திலிருந்து விற்பனைக்காக மாண்டசர் நகருக்கு நேற்று முன்தினம் ரயிலில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக கூறப்படு கிறது.
இது தொடர்பாக போலீஸா ருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இவ்விரு பெண்களும் மாண்டசர் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். இந் நிலையில் போலீஸ் பிடியில் இருந்த இப்பெண்களை ஒரு கும்பல் தாக்கியது. இந்நிலையில் போலீஸாரோ அல்லது பொது மக்களோ இதை தடுப்பதற்கு போதிய முயற்சிகள் எடுக்க வில்லை என குற்றம் சாட்டப்படு கிறது.
இந்தப் பெண்களிடம் இருந்து 30 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டதாகவும் உள்ளூர் மருத்துவரின் பரிசோதனையில் இது பசு இறைச்சியல்ல, எருமை இறைச்சி என தெரிய வந்ததாகவும் போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இறைச்சி விற்பனைக்கான உரிமம் இல்லாததால் இப்பெண் கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்களை தாக்கிய வர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.
இதுகுறித்து மாநில உள்துறை அமைச்சர் புபேந்திர சிங் நேற்று கூறும்போது, “சட்டத்தை தங்கள் கையில் எடுக்க எவருக்கும் உரிமை இல்லை. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும்” என்றார்.
மாநிலங்களவையில் அமளி
இந்நிலையில் இந்த விவ காரத்தை மாநிலங்களவை யில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி எழுப்பினார். அப்போது அவர், “பசுவதை தடுப்பு ஆர்வலர்களால் தலித்துகளும் முஸ்லிம்களும் தாக்கப்படுகின்றனர். இதை மத்திய அரசோ, பாஜக ஆளும் மாநில அரசுகளோ தடுக்க முற்படுவதில்லை. பெண்களை மதிக்க வேண்டும் என பாஜகவினர் கூறிவருகின்றனர். ஆனால் அவர்களே இதை பின்பற்றுவதில்லை” என்றார்.
உடனே காங்கிரஸ் எம்.பி.க்களும் இந்த விவகாரத்தை அவையில் எழுப்பி அமளி செய்தனர். வன்முறைக்கு தலித்து களும் முஸ்லிம்களும் அடிக்கடி இலக்காவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
அப்போது காங்கிரஸ் உறுப் பினர் குலாம் நபி ஆசாத் பேசும் போது, “பசுக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஏற்கிறோம். ஆனால் இதன் பேரில் தலித் மற்றும் முஸ்லிம்கள் தாக்கப்படுவதை ஏற்க முடியாது” என்றார்.
இதையடுத்து பேசிய மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, “வன்முறை எந்த மாநிலத்தில் நடந்தாலும் கண்டிக்கத்தக்கது. இதை நாங்கள் நியாயப்படுத்தவில்லை. இந்த விவகாரத்தில் ம.பி. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.