

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீண்டும் பா.ஜ.க.வில் இணையப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக, கர்நாடக முன்னாள் முதல்வரும் கர்நாடக ஜனதா கட்சியின் தலைவருமான எடியூரப்பாவை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினோம். அப்போது அவர் கூறியதாவது:
நரேந்திர மோடி பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த சனிக்கிழமை இரவு மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு எனது வாழ்த்துகளை தெரிவித்தேன்.
உங்கள் தலைமையிலான (மோடி) தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கர்நாடக ஜனதா கட்சி நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் என கூறினேன். தாய் கட்சியான பா.ஜ.க.வில் இணையுமாறு என்னை கேட்டுக் கொண்ட மோடி, இதுகுறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அதுமட்டுமல்லாமல் பா.ஜ.க.வின் தேசிய மற்றும் மாநில தலைவர்களும் மீண்டும் பா.ஜ.க.வில் இணையுமாறு தொடர்ந்து என்னை வற்புறுத்தி வருகின்றனர்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதால் இதுகுறித்து நல்லதொரு முடிவை அறிவிக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளேன். வரும் 19ஆம் தேதி கர்நாடக ஜனதா கட்சியின் உயர்நிலைக் குழுவைக் கூட்டி இதுகுறித்து விவாதிக்கப்படும்.
முன்னதாக, வரும் 18ஆம் தேதி கட்சியின் முக்கிய தலைவர்களுடன் எனது இல்லத்தில் ஆலோசனை நடத்தப்படும். எனது தலைமையிலான கர்நாடக ஜனதா கட்சியை தாய்க் கட்சியுடன் இணைப்பது குறித்து அடுத்த 10 தினங்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார் எடியூரப்பா.