

மருந்து உற்பத்தியில் பணியாளர் களுக்கு முறையான பயிற்சி அவசியம் என்று நாடு முழுவதிலும் உள்ள தனியார் மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு இந்திய மருந்து கட்டுப்பாடு இயக்குநரகம் (டிசிஜிஐ) உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது வளர்ந்து வரும் தொழில்களில் முக்கியமானதாக மருந்து உற்பத்தி தொழில் உள்ளது. ஆனால் முறையான பயிற்சி மற்றும் தகுதிவாய்ந்த பணியாளர்கள் இந்த நிறுவனங்களில் இல்லை என மத்திய அரசு கருதுகிறது.
இதனை மத்திய அரசின் கீழ் இயங்கும் டிசிஜிஐ சமீபத்தில் தனது அறிக்கையில் கூறியுள்ளது. இதைச் சரிசெய்யும் பொருட்டு நாட்டின் அனைத்து தனியார் மருந்து உற்பத்தி நிறு வனங்களும் தங்களை மேம்படுத் திக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத் தரவை டிசிஜிஐ தலைமை இயக்கு நர் ஜி.என்.சிங் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி பிறப்பித்துள்ளார்.
அதில், “மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பணியாளர்கள் அனைவரும் முறையானப் பயிற்சியுடன் தங்கள் தகுதி மற்றும் திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கான சான்றிதழை மத்திய அரசின் கீழ் இயங்கும் பயிற்சி நிறுவனமான, உயிரின அறிவியல் திறன் மேம்பாட்டுக் கவுன்சிலிடம் (எல்எஸ்எஸ்டிசி) பெற வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு சான்றிதழ் பெறுவதற்கு வரும் 2018, ஜனவரி 1 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறும்போது, “20 பில்லியன் டாலர் அளவுக்கு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் வளர்ந்து வருவதே இந்த உத்தரவுக்கு முக்கியக் காரணம். வளர்ச்சி பெற்ற நிறுவனங்களில் முறையான பயிற்சியில்லாத பணியாளர்களால் தயாரிக்கப்பட்ட மருந்துகளை அமெரிக்கா உள்ளிட்ட சில வெளிநாடுகள் இறக்குமதி செய்ய மறுத்துவிட்டன. குறிப்பாக, கடந்த 2015-ல் சென்னையை சேர்ந்த சில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்பட்டன. இதுபோன்ற பாதிப்புகளைத் தவிர்க்கும் பொருட்டு மத்திய அரசே முன்வந்து அனைத்து பணியாளர்களுக்கும் முறையான பயிற்சி அவசியம் என்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளது” என்று தெரிவித்தனர்.
இதன்படி, வரும் 2018, ஜனவரி 1-ம் தேதிக்கு பிறகு அனைத்து மருந்து உற்பத்தி நிறுவனங்களில் பணியாற்றும் அனைவரும் தங்கள் பணி தொடர்பான டிப்ளமோ, பட்டப்படிப்பு அல்லது எல்எஸ்எஸ்டிசி நிறுவனத்தின் சான்றிதழ் பெற்றிருப்பது கட்டாயம் ஆகிறது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்நிலையில் மத்திய அரசின் புதிய உத்தரவை மருந்து உற்பத்தி நிறுவனங்கள் வரவேற்றுள்ளன.
மத்திய அரசின் கீழ் இயங்கும் பயிற்சி நிறுவனமான, உயிரின அறிவியல் திறன் மேம்பாட்டுக் கவுன்சிலிடம் (எல்எஸ்எஸ்டிசி) பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.