Published : 05 Feb 2017 12:26 PM
Last Updated : 05 Feb 2017 12:26 PM

தாலியை கட்டி குங்குமம் வைத்தாலே திருமணம் செய்ததாக ஏற்க முடியாது: மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கழுத்தில் மங்கல தாலி கட்டி, நெற்றியில் குங்குமம் வைத்து விட்டாலே திருமணம் செய்து கொண்டதாக ஏற்றுக் கொள்ள முடியாது என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த 38 வயது பெண் ஒருவர் 40 வயது தொழிலதிபருடன் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். ஏற்கெனவே இரு குழந்தைகளுக்கு தாயான அவர், முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றவர். இதனால் இருவரது குடும்ப வாழ்க்கையும் சில காலம் சுமுகமாக சென்றுள்ளது. இந்தச் சூழலில் தொழிலதிபரின் குடும்பத்தினர், அவருக்கு அதே சமுதாயத்தில் வேறொரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த 38 வயது பெண் கடந்த 2015-ல் குடும்ப நல நீதிமன்றத்தில் தனக்கும், தொழிலதிபருக்கும் நடந்த திருமணத்தை அங்கீகரிக்கக் கோரி வழக்குத் தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் அந்த திருமணத்தை அங்கீகரித்தது.

இதை எதிர்த்து தொழிலதிபர் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. பதிலுக்கு அந்த பெண் சார்பிலும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘கிருஷ்ணன் சிலைக்கு முன்பாக கழுத்தில் மங்கல தாலி கட்டி, நெற்றியில் குங்குமம் வைத்து தொழிலதிபர் என்னை மனைவியாக ஏற்றுக் கொண்டார்’’ என தெரிவித்திருந்தார்.

இவ்வழக்கு நீதிபதி தர்மாதிகாரி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘‘இருவரின் உறவினர்களோ, சாட்சிகளோ இல்லாமல் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. எனவே 1955 இந்து திருமண சட்டப்படி இந்த திருமணத்தை அங்கீகரிக்க முடியாது. மேலும் தாலி கட்டி, குங்குமம் வைத்துவிட்டால் மட்டுமே திருமணமாகி விடாது. முறைப்படி முழு சடங்குகளும் நடந்திருக்க வேண்டும்’’ என தீர்ப்பளித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x