

சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில் நாளை (20-ம் தேதி) கண்டிப்பாக நேரில் ஆஜராகுமாறு, இமாச்சலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்குக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது மத்திய இரும்பு மற்றும் உருக்குத் துறை அமைச்சராக (2009- 2012) இருந்த வீரபத்ர சிங், வருமானத்துக்கு அதிகமாக ரூ.6.03 கோடி சொத்து சேர்த்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளது.
இதே குற்றச்சாட்டை மையமாக வைத்து, அமலாக்கத் துறையும் வீர்பத்ர சிங் உள்ளிட்டோர் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கிரிமினல் வழக்குப்பதிவு செய்துள்ளது. அவரது மனைவி பிரதிபா சிங், மகன் விக்ரமாதித்ய சிங் உள்ளிட்டோரிடம் ஏற்கெனவே அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.
வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கு மாறு வீரபத்ர சிங்குக்கு கடந்த 13-ம் தேதி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அப்போது, ஏற்கெனவே ஒப்புக்கொண்ட பணிகள் இருப்பதால் நேரில் ஆஜராக முடியவில்லை என அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், நாளை கண்டிப்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கோரி மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக டெல்லியில் ரூ.27.29 கோடி மதிப்புள்ள வீரபத்ர சிங்கின் பண்ணை வீட்டை அமலாக்கத்துறை முடக்கி வைத்துள்ளது குறிப்பிடத் தக்கது.