

தெலங்கானா மசோதா இப்போது உள்ள வடிவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து அது நிறைவேறுமானால் அரசியலிலிருந்தே விலகத் தயார் என ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி சவால் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஐதராபாத் தில் செய்தியாளர்களுக்கு புதன் கிழமை அளித்த பேட்டி:
பல பெரிய மாநிலங்கள் ஒருமித்த கருத்தின் அடிப்படை யிலேயே பிரிக்கப்பட்டன. ஒரு மாநிலத்தைப் பிரிக்கும் போது அதற்கான காரணம் மற்றும் லட்சியம் ஆகியவை மசோதாவில் இடம்பெறுவது அவசியம். இதுபோன்ற மசோதாவையே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும்.
ஆனால், தற்போது ஆந்திர அரசின் பரிசீலனைக்காக அனுப் பியுள்ள தெலங்கானா வரைவு மசோதாவில் பல்வேறு குறைகள் உள்ளன. இந்த மசோதாவை இதே வடிவில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யட்டும். அது அங்கு நிறை வேறுமானால் நான் அரசியலில் இருந்தே விலகத் தயார்.
தெலங்கானா மசோதா குறித்து சட்டசபைக்கு எந்தவித அதிகாரமும் இல்லையெனில், ஒட்டெடுப்புக்கு ஏன் சிலர் பயப்படுகின்றனர்.
வாக்கெடுப்பு நடத்தாமல் எப்படி சபையின் கருத்தைக் கூறுவது. தெலங்கானா மசோதாவில் பல தவறுகள் உள்ளன. அனைத்து பிரிவுகள் மீதும் சட்டசபையில் விவாதம் நடைபெற வேண்டும்.
ஆனால் 280 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில், இதுவரை வெறும் 86 உறுப்பினர்களே தங்களது கருத்துக்களை தெரி வித்துள்ளனர்.
இது எப்படி சட்டசபையின் கருத்தாகும்? எனவேதான் இதுகுறித்து விவாதித்து கருத்து தெரிவிக்க மேலும் 3 வார காலம் அவகாசம் வேண்டும் என்று கேட்கிறேன்.
மாநிலப் பிரி வினையை நான் முழுமையாக எதிர்க்கி றேன். மத்திய உள்துறை மாநில பிரிவினை குறித்து குடியரசு தலைவருக்கு சில தவறான கருத்துக்களைக் கூறி உள்ளது.
எனக்கு பதவி முக்கியமில்லை. மக்களும் மாநில நலனுமே முக்கியம். நான் எதற்கும் பயப்படமாட்டேன் என்றார்.
அமளியால் சட்டசபை ஒத்திவைப்பு:
தெலங்கானா மசோதா மீது விவாதிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே அவகாசம் உள்ள நிலையில், கடும் அமளி காரணமாக ஆந்திர சட்டசபை புதன்கிழமையும் ஒத்தி வைக்கப்பட்டது.
மத்திய அரசு அனுப்பிய தெலங்கானா வரைவு மசோதா காரண மாக, ஆந்திர சட்டபையில் தொடர்ந்து அமளி நிலவி வருகிறது.
பல்வேறு பிழைகள் உள்ளதாலும் மாநிலத்தைப் பிரிப்பதற்கான காரணத்தை மத்திய அரசு தெரிவிக்காததாலும் தெலங்கானா மசோதாவை திருப்பி அனுப்பவேண்டும் என முதல்வர் கிரண்குமார் ரெட்டி சபாநாயகருக்கு நோட்டீஸ் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து, கடந்த 3 நாட்களாக அவையில் எந்தவித விவாதமும் நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. புதன்கிழமையும் காலை சட்டசபை கூடியதும், தெலங்கானாவுக்கு ஆதரவாக வும் எதிராகவும் சபாநாயகர் இருக்கை முன் சென்று எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அவை 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியபோதும் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் வியாழக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.