

தீர்ப்பை அவமதிக்கும் விதமாக விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது என்று ராணுவ முன்னாள் தலைமைத் தளபதி வி.கே.சிங்குக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வி.கே.சிங்கின் பிறந்த தேதி தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவருக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது. இதைக் கடுமையாக விமர்சித்து வி.கே.சிங் கருத்து தெரிவித்திருந்தார்.
இதை நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் எனக் கூறி, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் ஆர்.எம். லோத்தா, எச்.எல் கோகலே ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸுக்கு விளக்கம் அளிக்காத வி.கே.சிங்குக்கு கடும் கண்டனம் நீதிபதிகள், இவ்வழக்கை எளிதாக எடுத்துக் கொள்ளப்போவதில்லை எனத் தெரிவித்தனர்.
மேலும், தீர்ப்பு குறித்த விமர்சனங்களை ஏற்கத் தயார். ஆனால், தீர்ப்பு குறித்து உள்நோக்கத்துடன் அவதூறு பரப்பப்படுவதை ஏற்க முடியாது என்று காட்டமாகக் கூறினர்.
இந்த வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், வி.கே.சிங் தனது விளக்கத்தை நவம்பர் 15 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.