Last Updated : 14 Feb, 2017 07:31 AM

 

Published : 14 Feb 2017 07:31 AM
Last Updated : 14 Feb 2017 07:31 AM

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் தலையெழுத்தை எழுதும் நீதிபதிகள்

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் சொத்துக்குவிப்பு வழக்கு பெரும் சோதனைகளை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் ஜெயலலிதா இரண்டு முறை கைது செய்யப்பட்ட போது தற்போதைய அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். சொத்துக் குவிப்பு வழக்கால் சசிகலா ஏற்கெனவே சென்னை சிறையிலும், பெங்களூரு சிறையிலும் அடைக்கப் பட்டிருக்கிறார். தற்போது அரசிய லில் நுழைந்திருக்கும் சசிகலாவின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக இந்த சொத்துக்குவிப்பு வழக்கு உருவெடுத்திருக்கிறது. இந்நிலையில் சசிகலாவின் தலையெழுத்தை எழுதும் நீதிபதி கள் யார் என்பதை பார்ப்போம்.

நீதிபதி பினாகி சந்திரகோஷ்:

உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான இவர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை தொடக்கம் முதலே விசாரித்து வருகிறார். பினாகி சந்திரகோஷ் மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 1952-ம் ஆண்டு மே 28-ம் தேதி பிறந்தார். பிரபலமான வழக்கறிஞர் குடும்பத்தைச் சேர்ந்த இவரின் தந்தை கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சாம்பா சந்திரகோஷ் ஆவார்.

கொல்கத்தா செயிண்ட் சேவியர் கல்லூரியில் இளங்கலை படிப்பை முடித்த பினாகி சந்திரகோஷ், கொல்கத்தா சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். 1976-ம் ஆண்டு வழக்கறிஞராக பணியாற்ற தொடங்கிய இவர், 1997-ம் ஆண்டு கொல்கத்தா நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2012-ம் ஆண்டு ஆந்திர உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட இவர், 2013-ம் ஆண்டு அந்த நீதிமன்றத்தின் செயல் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற இவர், வரும் மே 27-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். குற்றவியல், குடிமையியல் வழக்குகளில் ஆழ்ந்த புலமை வாய்ந்த பினாகி சந்திரகோஷ், சொத்துக்குவிப்பு வழக்கை மிகவும் உன்னிப்பாக கவனித்து, நுட்பமாக‌ விசாரித்தார். அவ்வப்போது நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பின் மீது சந்தேகங்களை எழுப்பி, குறிப்பெடுத்துக்கொண்டார்.

நீதிபதி அமித்வா ராய் :

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு வேகமெடுத்த போது தலைமை நீதிபதியாக இருந்த டி.எஸ். தாக்குர் இவரை நியமித்தார். வழக்கில் இணைக்கப்பட்ட நாளில் இருந்து சொத்துக்குவிப்பு வழக்கின் அனைத்து ஆவணங்களையும் ஆழமாக வாசித்தார். நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பில் உள்ள குறைபாடுகள் குறித்து கேள்வியெழுப்பி, பதில்களை குறித்துக்கொண்டார்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அமித்வா ராய் கடந்த 1953-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி பிறந்தார். இவரது தந்தை ஆனந்த் பூஷன் ராய் சிறந்த குற்றவியல் வழக்கறிஞராக திகழ்ந்ததால் இவருக்கும் வ‌ழக்கறிஞர் ஆசை உருவானது. சட்டக் கல்லூரி படிப்பை முடித்து 1976-ம் ஆண்டு வழக்கறிஞர் பணியில் இணைந்த இவர், குவஹாட்டி உயர் நீதிமன்றம், கொல்கத்தா நீதிமன்றம் ஆகியவற்றில் வாதிட்டுள்ளார். கடந்த 2002-ம் ஆண்டு குவஹாட்டி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், 2013-ம் ஆண்டு ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். கடந்த 2015-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற இவர், அடுத்த ஆண்டு ஓய்வு பெறுகிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் ஏற்கெனவே வெளியான இரு தீர்ப்புகளையும் தீவிரமாக ஆராய்ந்துள்ள இவர், தனது தீர்ப்பை ஆழமாக எழுதி இருப்பார் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x