

பிஹாரில் சிஐஎஸ்எப் வீரர் ஒருவர் நேற்று துப்பாக்கியால் சுட்டதில் சக வீரர்கள் 4 பேர் பலியாயினர்.
இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் சத்யபிரகாஷ் நேற்று கூறியதாவது:
அவுரங்காபாத் மாவட்டத்தில் நவிநகர் அனல் மின் உற்பத்தி நிலையம் கட்டப்பட்டு வருகிறது. மாநில அரசு மற்றும் என்டிபிசி-யின் கூட்டு முயற்சியில் உருவாகும் இதற்கான பாதுகாப்புப்பணியில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர்கள் (சிஐஎஸ்எப்) ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று ஒரு வீரர் தன்னிடமிருந்த துப்பாக்கியால் சக வீரர்களை நோக்கி திடீரென சுட்டுள்ளார். இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 2 பேரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் 2 பேரும் இறந்துவிட்டதாக தெரிவித் தனர்.
இதையடுத்து, துப்பாக்கியால் சுட்ட வீரரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரைச் சேர்ந்த பல்வீர் சிங் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பல்வீருக்கு அவரது உயர் அதிகாரிகள் விடுப்பு வழங்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர் சக வீரர்களைச் சுட்டிருக்கலாம் என விசாரணையில் தெரியவந் துள்ளது.