ம.பி., உ.பி.யில் கடந்த 2 நாளில் மழைக்கு 28 பேர் பலி

ம.பி., உ.பி.யில் கடந்த 2 நாளில் மழைக்கு 28 பேர் பலி
Updated on
1 min read

மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசத்தில் கன மழைக்கு கடந்த வெள்ளிக்கிழமை முதல், 28 பேர் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்தியப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் சாகர், சத்னா, ரேவா, பன்னா உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வீடுகள் இடிந்துள்ளன. ராணுவத்தின் உதவியை மாநில அரசு கோரியுள்ளது.

இந்நிலையில் சாகர் மாவட்டம், ரகத்கார் பகுதியில் மெஹ்தாப் ஷில்பகர் (59) என்பவரின் வீடு நேற்று அதிகாலை இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் இரு பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.

சத்னா மாவட்டம், மைஹர் நகரில் புதிதாக கட்டப்பட்டு வந்த 3 மாடி கட்டிடம் நேற்று இடிந்து விழுந்தது. இதில் கட்டு மானத் தொழிலாளர்களின் குடும்பங்கள் சிக்கிக் கொண்டன. இதையடுத்து 4 பேர் மீட்கப்பட்டனர். இது தவிர மழை தொடர்பான பல்வேறு சம்பவங்களில் மேலும் 10 பேர் இறந்தனர்.

இதனிடையே மாநில வெள்ள நிலவரம் குறித்து முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று ஆலோசனை நடத்தினார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுவதாக அவர் கூறினார்.

உ.பி.யில் 11 பேர் பலி

இதனிடையே உ.பி.யின் புந்தேல்கண்ட் பகுதியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இங்குள்ள பண்டா மாவட்டம், கல்வன்கஞ்ச் பகுதியில் ஒரே நாளில் நூற்றுக்கணக்கான குடிசை வீடுகள் இடிந்தன. இதில் 5 பேர் உயிரிழந்தனர்.

கான்பூர் புறநர் பகுதியில் நேற்று முன்தினம் வீடு இடிந்த சம்பவத்தில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

இதுபோல் அலகாபாத் நகரில் வீடு இடிந்து, 12 வயது சிறுமியும், சீதாபூரில் கூரை இடிந்து விழுந்து ஒருவரும் உயிரிழந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in