

அயோத்தி வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 13 பேர் மீதான கிரிமினல் சதி உள்ளிட்ட வழக்குகளை மீண்டும் விசாரிக்க சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதன் காரணமாக அவரது குடியரசுத் தலைவர் கனவு தகர்ந்துள்ளது என்றே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
வரும் ஜூலை மாதத்துடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் வேட்பாளராக தன்னை அறிவிப்பார்கள் என அத்வானி எதிர்பார்த்திருந்தார். ஏற்கெனவே 2014 மக்களவை தேர்தலில் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த அத்வானி குடியரசுத் தலைவர் வாய்ப்பு வரும் என காத்திருந்தார். இந்நிலையில் தான், அயோத்தி வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 13 பேர் மீதான கிரிமினல் சதி உள்ளிட்ட வழக்குகளை மீண்டும் விசாரிக்க சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
வழக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவும்
கடந்த 2001-ம் ஆண்டு, பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோரை பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து ரேபரேலி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். 2010-ல் அலகாபாத் உயர் நீதிமன்றமும் இந்தத் தீர்ப்பை உறுதி செய்தது.
இந்நிலையில் அத்வானி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்தும் அவர்கள் மீதான கிரிமினல் சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை மீண்டும் விசாரிக்க அனுமதி கோரியும் 2011-ல் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ முறையிட்டது.
இந்த மேல்முறையீட்டு மனு இன்று (புதன்கிழமை) நீதிபதிகள் பி.சி.கோஷ், நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், "பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமா பாரதி, மீதான வழக்குகளில் சிபிஐ விசாரணையை தொடரலாம். தினந்தோறும் விசாரணை நடத்தி 2 வருடங்களுக்குள் வழக்கு விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும்.
வழக்கு விசாரணை முடியும்வரை விசாரணை நீதிமன்ற நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்படக்கூடாது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கல்யாண் சிங் தற்போது ராஜஸ்தான் ஆளுநராக இருப்பதால் அவர் பதவியிலிருந்து விலகிய பின்னரே விசாரணை மேற்கொள்ள முடியும்" எனத் தெரிவித்தது.