

தனது தந்தையை 5 ஆண்டு களுக்கும் மேலாக வீட்டுக் குள்ளேயே சட்டவிரோதமாக அடைத்து வைத்திருந்த மகனுக்கு நீதிமன்றம் 3 மாதம் சிறை தண்டனை வழங்கி உள்ளது.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா நகரின் மோரன் வாலி கலி பகுதியைச் சேர்ந்தவர் குர்பஜன் சிங். இவருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் ஒரு மகனும் மகளும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். குர்பஜனுடன் மற்றொரு மகன் ஜஸ்பால் சிங் வசித்து வந்தார்.
இந்நிலையில், சுமார் 5 ஆண்டு களாக குர்பஜனை வீட்டுக்குள் ளேயே சிறை வைத்திருப்பதாக ஜஸ்பால் மீது அப்பகுதி மக்கள் கோட்வலி காவல் நிலையத்தில் கடந்த 2010-ம் ஆண்டு புகார் செய் தனர். இதனிடையே இந்தத் தகவல் ஊடகங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து, குர்பஜன் சிங்கை மீட்டு முதியோர் இல்லத்தில் சேர்க்குமாறு பாட்டியாலா நகர அப்போதைய காவல் துறை துணை ஆணையர் தீபிந்தர் சிங் உத்தரவிட்டார். இதன்படி மாவட்ட துணை ஆட்சியர் குர்மீத் சிங் தலைமையிலான குழுவினர், வீட்டின் பூட்டை உடைத்து குர்பஜனை மீட்டுள்ளனர்.
இது தொடர்பாக ஜஸ்பால் மீது, இந்திய தண்டனை சட்டம் (278, 346, 325) மற்றும் பெற்றோர், முதியோர் பராமரிப்பு மற்றும் நல பாதுகாப்பு சட்டத்தின் 24-வது பிரிவின் கீழ் 2010-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே குர்பஜன் சிங் உயிரிழந்தார்.
இந்த வழக்கை தலைமை ஜுடீசியல் மாஜிஸ்திரேட் பூனம் பன்சால் விசாரித்து வந்தார். விசாரணை முடிவடைந்த நிலை யில், ஜஸ்பால் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதால் அவருக்கு 3 மாத சிறை தண்டனை விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.
எனினும் இந்த தண்டனை போதுமானதாக இல்லை என்றும் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாகவும் குர்பஜனின் வீட்டுக்கு பக்கத்தில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.