

நிலை தடுமாறி குளத்தில் விழுந்து மூழ்கிய காரில் இருந்து 7 பேரைக் காப்பாற்றியிருக்கிறார்கள், கர்நாடக அமைச்சரும், அவரது கார் ஓட்டுநரும்.
கர்நாடகத்தின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கிம்மானி ரத்னாகர் தனது சொந்த ஊரான தீர்த்தஹள்ளியிலிருந்து பெங்களூருக்கு செவ்வாய்க்கிழமை அரசு காரில் சென்றுகொண்டிருந்தார். பாதுகாப்புக்காக போலீஸ் வாகனமும் அவரது காரை பின்தொடர்ந்தது.
அப்போது, முன்னால் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று குளத்தில் மூழ்கியதால், அதில் இருந்த குழந்தை, பெண்கள் உள்பட 7 பேர் தத்தளித்தனர். இதைக் கண்ட, அமைச்சர் உடனடியாக தனது காரை நிறுத்தச் சொல்லி, மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டார்.
இதுகுறித்து அமைச்சர் ரத்னாகர் கூறும்போது, “நாங்கள் காரில் சென்றபோது மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது ஒரு கார் மின்னல் வேகத்தில் எங்களை முந்திச் சென்றது. கொஞ்ச தூரம் சென்றதும், சாலை அருகே உள்ள ஒரு குளத்தில் அந்தக் கார் மூழ்கிக் கொண்டிருந்தது. அதில் பயணம் செய்த ஒருவர் ஜன்னல் வழியாக கையைத் தூக்கி உதவி கோரியதைப் பார்த்து காரை நிறுத்தினோம்.
உடனே, எனது கார் ஓட்டுநர் கே.சந்துரு குளத்தில் குதித்து 2 பெண்கள் மற்றும் ஒரு குழந்தையைக் காப்பாற்றினார். மற்றவர்களின் உதவியுடன் காரில் பயணம் செய்த 4 ஆண்களும் காப்பாற்றப்பட்டனர்” என்றார் ரத்னாகர்.
அமைச்சருடன் பாதுகாப்பு வாகனத்தில் பயணம் செய்த 5 போலீஸாரில் ஒருவருக்குக்கூட நீச்சல் தெரியாது என்பது இதில் குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்தில், லேசாக காயமடைந்த அந்த 7 பேரையும் தீர்த்தஹள்ளியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி வழங்க அமைச்சர் ஏற்பாடு செய்தார்.