

18 முதல் 24 வயதுடைய இளைய தலைமுறையினர், தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யுமாறு ஊக்குவிக்க வேண்டும் என்று பிரதமருக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாஜகவின் தேர்தல் பிரசாரக் குழு தலைவராக அறிவிக்கப்பட்டதும், நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பேரணிகளையும் பொதுக்கூட்டங்களையும் நடத்தி மோடி ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயரை பதிவு செய்வதன் அவசியம் குறித்து மோடி பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் இணையதளத்தின் மூலம், பிரதமருக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் அவர் விடுத்துள்ள செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
'18 முதல் 24 வயதுள்ள இளைஞர்கள், இளம்பெண்களிடம் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக் கூற வேண்டும். வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர்களை இப்போதே பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அவர்களை அறிவுறுத்த வேண்டும்.
வாக்களிக்கத் தகுதியுள்ள பலர் இன்னமும் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யாமல் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரும் உடனடியாக தங்களின் பெயர்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். இதற்காக நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், ஆன்மிகத் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் குரல் கொடுக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் அலுவலக அதிகாரப்பூர்வ டுவிட்டர் இணையதளத்துக்கும், தலாய் லாமா, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், கிரண் பேடி, சச்சின் டெண்டுல்கர், சுஷ்மா ஸ்வராஜ், சிவராஜ் சிங் சௌகான், சசி சரூர், அமிதாப் பச்சன், ஷாருக் கான், சல்மான் கான், அமீர் கான், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கும் அவர் தனித் தனியே டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அடுத்த ஆண்டு முதல் முறையாக வாக்களிக்கத் தகுதியுள்ள 18 முதல் 23 வயதுக்கு உள்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை 14 கோடியே 93 லட்சமாகும். இது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் 20 சதவீதம் என தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இந்த இளைஞர்களின் வாக்குகளைப் பெற பாஜக வியூகம் வகுத்து வருகிறது.
இளைஞர்களில் பெரும்பான்மை யானோர் பாஜகவுக்கு ஆதரவாக இருப்பதாக மோடி கருதுகிறார். எனவே, அவர்களின் வாக்குகள் அனைத்தையும் பாஜகவுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் இந்த பிரசாரத்தை மோடி தொடங்கியுள்ளார்.