ரூபெல்லா தடுப்பூசியின் நன்மைகள் பற்றி சமூக வலைதளங்கள் மூலம் விழிப்புணர்வு: மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு

ரூபெல்லா தடுப்பூசியின் நன்மைகள் பற்றி சமூக வலைதளங்கள் மூலம் விழிப்புணர்வு: மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு
Updated on
1 min read

தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசிக்கு எழுந்துள்ள எதிர்ப்பை முறியடிக்க சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

தட்டம்மை மற்றும் ரூபெல்லா என்ற அம்மை நோயை தடுக்க, மீசில்ஸ்-ரூபெல்லா தடுப்பூசி உலகின் பல நாடுகளில் போடப்படுகிறது. இதை உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவிலும் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. 6 மாதம் முதல் 15 வயது வரையிலான சுமார் 41 கோடி குழந்தைகளுக்கு அடுத்த 15 மாதங்களில் போட திட்டமிடப்பட்டது.

முதல்கட்டமாக தமிழகம், புதுச்சேரி, கோவா, கர்நாடகா மற்றும் லட்சத் தீவில் இந்த தடுப்பூசி போடும் பணி பள்ளிகளில் இம்மாதம் தொடங்கியது. இதற்கு முன்பாக இந்த தடுப்பூசிக்கு எதிராக சமூக வலைதளங்களில் எழுந்த கருத்துகளால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

இந்த ஊசியை தங்கள் குழந்தைகளுக்கு போடவேண்டாம் என பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த எதிர்ப்பை முறியடிக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, “இந்த தடுப்பூசியை அரசு போடத் தொடங்குவதற்கு முன்பே, பொதுமக்களிடம் அதற்கு எதிரான கருத்துகள் பரவத் தொடங்கிவிட்டன. இதனால் பலரும் இந்த தடுப்பூசி மீது சந்தேகம் அடைந்துள்ளனர். இதற்கு காரணமானவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதை விட, தடுப்பூசியின் நன்மைகளை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். இதில் தடுப்பூசி போட்டுக்கொண்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் கருத்துகளையும் வீடியோ பதிவுசெய்து சமூக வலைதளங்களில் வெளியிட உள்ளோம்” என்று தெரிவித்தனர்.

ஏற்கெனவே இந்த தடுப்பூசி போட்டப்பட்ட குழந்தைகளுக்கும் தற்போது கூடுதலாக போடலாம் எனவும் இந்த தடுப்பூசியை தனியார் மருத்துவமனைகள் பல ஆண்டுகளாக போட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சகம் கூறுகிறது. இந்த தடுப்பூசி உட்பட பல்வேறு முயற்சிகள் மூலம் இந்தியாவில் வரும் 2020-ம் ஆண்டுக்குள் தட்டம்மையை ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in