ஐ.எஸ்.ஸுக்கு ஆள் சேர்த்த இருவருக்கு 7 ஆண்டு சிறை: டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

ஐ.எஸ்.ஸுக்கு ஆள் சேர்த்த இருவருக்கு 7 ஆண்டு சிறை: டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
1 min read

ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு பணம் மற்றும் ஆட்கள் திரட்டிய இருவருக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் நேற்று 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த அசாருல் இஸ்லாம் (24), மகாராஷ்டிராவைச் சேர்ந்த முகம்மது பர்ஹான் ஷேக் (25) ஆகிய இருவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு தவறுக்கு வருந்தியதை தொடர்ந்து, மாவட்ட நீதிபதி அமர்நாத் இவர் களை குற்றவாளி என அறிவித்தார்.

அசாருல் இஸ்லாம், பர்ஹான் ஷேக் ஆகிய இருவர் மற்றும் 36 வயது ஆத்னன் ஹாசனுக்கு எதிராக நீதிமன்றம் கடந்த மாதம் குற்றச்சாட்டுகள் பதிவு செய்தது.

இவர்கள் மூவரும் தீவிரவாத குழுவை உருவாக்கி ஐ.எஸ். அமைப்பின் சார்பு அமைப்பாக செயல்பட்டதாகவும் சிரியா சென்று ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து போரிடும்படி பல்வேறு நாடுகளின் இளைஞர்களைத் தூண்டிய தாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

மூவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட 1 மாதத்துக்கு பிறகு அசாருல் இஸ்லாம், பர்ஹான் ஷேக் ஆகிய இருவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டு வருத்தம் தெரிவித்தனர். இது தொடர்பாக இவர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “நாங்கள் இதற்கு முன் எந்தக் குற்றச் செயலிலும் ஈடுபட வில்லை, தேசிய நீரோட்டத்தில் இணைந்து சமூகத்துக்கு பயனுள்ள வகையில் வாழ விரும்புகிறோம்” என்று கூறினர்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, “இவர்களுக்கு சலுகை காட்டுவது அவசியம். அதேநேரம் சமூகத்துக்கு இது தவறான தகவலாகவும் இருக்கக்கூடாது” என்று கூறி 7 ஆண்டுகள் தண்டனை அறிவித்தார். மூவரில் ஹாசனுக்கு எதிரான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற உள்ளது.

இந்த மூவருக்கு எதிராகவும் கடந்த ஆண்டு ஜனவரி 28-ம் தேதி என்ஐஏ வழக்குப் பதிவு செய்தது. மறுநாள் அபுதாபியில் இருந்து டெல்லி வரும்போது மூவரும் கைது செய்யப்பட்டனர்.

ஹாசன், ஷேக் ஆகிய இவரும் முறையே 2008 மற்றும் 2012 முதல் பணி நிமித்தமாக அடிக்கடி ஐக்கிய அரபு அமீரகம் சென்று வந்தனர். 2015-ல் அசாருல் இஸ்லாம், அமீரகம் சென்று இவர்களுடன் இணைந்தார். இந்திய முஜாகிதீன் அமைப்பில் உறுப்பினராக இருந்த ஹாசன் பின்னர் ஐ.எஸ். அமைப்பால் ஈர்க்கப்பட்டார்.

இவர்கள் மீது என்ஐஏ பதிவு செய்த குற்றப்பத்திரிகையில், “மூவரும் பிறருடன் இணைந்து தங்கள் சித்தாந்தத்தைப் பரப்புவதற்கான குற்றச்சதியில் ஈடுபட்டனர். ஐ.எஸ். அமைப்புக்கு ஆட்கள், பணம் திரட்டுவது, தேர்வு செய்யப்பட்டவர்கள் சிரியா செல்ல உதவுவது ஆகிய குற்றங்களில் ஈடுபட்டு வந்தனர்.

பல்வேறு இமெயில் முகவரி கள், சகாக்களின் தொலைபேசி எண்கள், சமூக வலைதளங்களைத் தங்கள் செயல்களுக்கு பயன் படுத்தி வந்தனர்” என்று கூறப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in