

காஷ்மீர் மாநிலத்திற்கு அனைத்துக் கட்சிக் குழு சென்றுள்ள நிலையில் மீண்டும் கலவரம் வெடிக்க பலர் காயமடைந்துள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு காஷ்மீர் சென்றடைந்தது. இந்நிலையில் தெற்கு காஷ்மீரில் கலவரம் வெடித்து 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ராஜ்நாத் சிங் இன்று காலை கூறும்போது, “அனைத்துக் கட்சிக் குழுவுடன் காஷ்மீர் செல்கிறோம். அங்கு தனிநபர்கள், குழுக்கள் என்று காஷ்மீரில் அமைதியை விரும்புபவர்கள் மற்றும் இயல்பு வாழ்க்கையை மீட்க விரும்புபவர்கள் ஆகியோரைச் சந்திக்கிறோம்” என்றார்.
மையநீரோட்ட அரசியல் கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சித் தலைமை ஒமர் அப்துல்லா உட்பட சில சந்திப்புகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது, ஆளுநர் வோராவை மாலையில் சந்திக்கின்றனர். முதலில் முதல்வர் மெஹ்பூபா முப்தியைச் சந்திக்கின்றனர்.
பிரிவினைவாதத் தலைவர்கள் மிர்வைஸ் உமர் பரூக், யாசின் மாலிக் ஆகியோர் சிறைவைக்கப்பட்டுள்ளனர். பிரிவினைவாதிகளை பேச்சு வார்த்தைக்கு முப்தி அழைக்க இவர்கள் தரப்பிலிருந்து பதில் எதுவும் தரப்படவில்லை.
ஒமர் அப்துல்லா இது குறித்து தனது ட்வீட்டில், “மிர்வைஸ் அரசு சப் ஜெயிலில் உள்ளார், யாசின் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், மற்றவர்கள் பிற சிறைகளில் இருக்கின்றனர், இந்நிலையில் மெஹ்பூபா அவர்களைச் சந்திக்க காலமும், இடமும் கேட்கிறார்!!! பேச்சு வார்த்தைகளில் உண்மையான நாட்டமுள்ளவர் ஹுரியத் தலைவர்களை விடுதலை செய்திருக்க வேண்டும்.
அனைத்துக் கட்சிக் குழுக்கு முதல்வர் சிறையின் பட்டியலையும் அவர்களை சிறையில் சந்திக்க முடியும் நேரத்தையும் அளித்திருக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
மீண்டும் வன்முறை:
ஊரடங்கு உத்தரவு இருந்தும் தெற்கு காஷ்மீர் ஷோபியான், அனந்த்நாக் மாவட்டங்களில் இன்று காலை வன்முறை வெடித்தது. சுதந்திரப் பேரணி நடத்த முயற்சித்த போது பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. அனந்த்நாகில் 9 ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமடைந்தனர். ஸ்ரீநகரின் பெரும்பகுதிகளில் ஊரடங்கு அமலில் உள்ளன.
கடந்த 58 நாட்களில் காஷ்மீர் வன்முறைக்கு 73 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.