Published : 01 Feb 2014 11:15 AM
Last Updated : 01 Feb 2014 11:15 AM

டெல்லியில் இனவெறி தாக்குதலில் கல்லூரி மாணவர் பலி

டெல்லியில் இனவெறி தாக்குதலில் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் பலியானார்.

அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. நிடோ பவித்ரா-வின் மகன் நிடோ டானியன் தெற்கு டெல்லியில் நேற்று ஒரு கும்பால் தாக்கப்பட்டார். அவர் மீது நடத்தப்பட்டது இனவெறி தாக்குதல் என்று கூறப்படுகிறது.

தெற்கு டெல்லியில் தனது நண்பர் வீட்டைத் தேடிச் சென்ற நிடோ டானியன் அங்கு ஒரு கடை அருகே நின்ற சிலரிடம் வழி கேட்டிருக்கிறார். அப்போது அவரது சிகை அலங்காரத்தை பார்த்த அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் நிடோ சீனாவைச் சேர்ந்தவர் போல் தோற்றம் அளிப்பதாக கிண்டலடித்துள்ளனர்.

கிண்டல் செய்ய வேண்டாம் என பல முறை நிடோ தெரிவித்தும் அவர்கள் அதை நிறுத்தாததால் கோபத்தில் கடை கண்ணாடியை உடைத்துள்ளார் நிடோ.

பதிலுக்கு, நிடோவை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. நிலைகுலைந்து நிடோ சரிந்துள்ளார். பின்னர் ஒரு வழியாக தனது அறைக்குச் சென்றுள்ளார். காலையில் நிடோ வெகு நேரமாகியும் எழாமல் இருந்ததால் அவரை அவரது நண்பர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நிடோ ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பாஸி கூறுகையில், "முதல் கட்ட சாட்சியங்களை வைத்து நடந்த சம்பவம் இனவெறி தாக்குதல் என கூற முடியாது. கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம், இருப்பினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை" என்றார்.

போலீசில் புகார்:

தாக்குதலுக்குப் பிறகு மாணவன் நிடோ டானியன் போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

பின்னர் இரு தரப்பில் இருந்தும் இனி சண்டையில் ஈடுபடமாட்டோம் என்று எழுதி வாங்கியுள்ளனர். ஆனால் மாணவர் டானியன் தான் நலமாக இருப்பதாக தெரிவித்து விட்டுச் சென்றதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

பிரேதப் பரிசோதனை அறிக்கை:

வெள்ளிக் கிழமை பிரேதப் பரிசோதனை நடைபெற்றுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பவில்லை என போலீஸ் துணை கமிஷனர் பி.கருணாகரன் தெரிவித்துள்ளார். மேலும் சில சோதனை அறிக்கைகள் மட்டும் இன்னும் வெளியாக வேண்டியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

விசாரணை கோரும் பாஜக:

இதற்கிடையில், பாஜகவினரும், மாணவர்கள் சிலரும் டெல்லி போலீஸ் கமிஷனரை சந்தித்து இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x