நரசிம்மராவிடம் மோடி கற்க வேண்டியது ஏதாவது இருக்கிறதா?

நரசிம்மராவிடம் மோடி கற்க வேண்டியது ஏதாவது இருக்கிறதா?
Updated on
3 min read

டெல்லியில் உள்ள ‘இந்தியா இன்டர்நேஷனல் சென்ட்டரில்’ இந்த வார தொடக்கத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அங்கிருந்தவர்கள் நன்கு படித்தவர்கள். பல துறைகளில் திறன் மிக்கவர்கள். நூல் ஆசிரியர் வினய் சீதாபதி, ‘‘நரசிம்ம ராவிடம் இருந்து மோடி கற்று கொள்ள வேண்டியது ஏதாவது இருக்கிறதா’’ என்று கேள்வி கேட்டார்.

அதைத் தொடர்ந்து பார்வையாளர்களைப் பார்த்து நான் பல கேள்விகளை கேட்டேன். ‘‘இந்தியாவுக்கு புதிய விடிவு காலம் பிறக்கும் என்ற உறுதிமொழியுடன், கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் மோடி பிரதமராக பதவியேற்றார். அவருடைய நம்பிக்கையாக இருக்கும் சில அமைச்சகங்களை சொல்லுங்கள்’’ என்று கேட்டேன்.

மேலும், வேளாண்மை, சுகாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ஊரக வளர்ச்சி, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் போன்ற சில துறைகளை பட்டியலிட்டேன்.

இந்திய இன்டர்நேஷனல் சென்ட்டரில் 500-க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். அவர்களில் 10 பேர் மட்டும் (வெறும் 2 சதவீதம்) வேளாண்துறை அமைச்சர் ராதா மோகனுக்காக கை தூக்கினர். மிக குறைந்த எண்ணிக்கையில் 2 பேர் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பீரேந்திர சிங்கை கூறினர். இந்த இரண்டுக்கும் இடைபட்ட நிலையில் ஜே.பி.நட்டா (சுகாதாரம்), ஹர்ஷ்வர்தன் (அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்) தவார் சந்த் கெலாட் (சமூக நீதி) ஆகியோரை குறிப்பிட்டனர்.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பண்டாரு தத்தாத்ரேயா, தற்கொலை செய்து கொண்ட ஹைதராபாத் மாணவர் ரோகித் வெமுலா மீது நடவடிக்கை எடுக்க ஸ்மிருதிக்கு கடிதம் எழுதியவர்), பழங்குடியினத்தவர் நலன் (ஜூவல் ஓரம்), சுரங்கம் (நரேந்திர சிங் தோமர்) ஆகியோரைப் பற்றி கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்காது.

சமீபகாலமாக அமைச்சர்கள் பலரை பற்றி யாருக்கும் தெரியவில்லை. காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது சுகாதார துறை அமைச்சர்களாக இருந்த வர்களை பெரும்பாலும் நினைவில் வைத்திருக் கலாம். ஏனெனில், அவர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியதுதான் காரணம். அன்புமணி ராம தாஸுக்கும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கும் இடையில் ஏற்பட்ட சர்ச்சை அவற்றுள் ஒன்று.

காங்கிரஸ் கட்சியில் குலாம் நபி ஆசாத் செல்வாக்கு உள்ளவர். ஆனால், இரண்டாவது முறை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது, 5 ஆண்டுகளும் அவர்தான் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார் என்பது பலருக்கு தெரிவதில்லை. அதேபோல் காங்கிரஸின் 2-வது முறை ஆட்சியில் 5 ஆண்டுகளில் 7 ரயில்வே அமைச்சர்கள் பதவி வகித்துள்ளனர்.

அவர்களின் செயல்பாடுகள் தங்களுக்கு முன்பு இருந்த அமைச்சர்களை விட மோசமாகவே இருந்தது. கடைசியில் மக்களின் கடும் கோபத்தால் ஆட்சியில் இருந்து தூக்கி வீசப்பட்டனர் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அரசியல் வரலாற்றில் இதற்கு முன்பு கடுமையான அளவில் ஓர் ஆட்சியை இந்த அளவுக்கு மக்கள் தூக்கி வீசியதில்லை. மோடி அளித்த வாக்குறுதிகளை நம்பி மக்கள் அவரிடம் ஆட்சியை அளித்தனர்.

சுகாதாரம், வேளாண்மை, ஊரக வளர்ச்சி, சமூக நீதி, நீர், வேலைவாய்ப்பு, உணவு ஆகியவற்றை எல்லாம் இன்றைக்கு நம்பிக்கை அமைச்சகங்களாக நாம் கூறுகிறோம். ஆனால், இன்று இந்த துறைகள் எல்லாம் நம்பிக்கை யற்றவையாக உள்ளன.

எனினும், மோடி அரசு மோசமாகிவிடவில்லை. அதற்கு வெகு தொலைவில்தான் உள்ளது. உலகளவில் சவால்கள் அதிகம் இருந்தாலும், இந்திய பொருளாதாரம் பலமுள்ளதாகவே இருக் கிறது. காஷ்மீரில் பல பிரச்சினைகள் இருந் தாலும், சமூக ஒருங்கிணைப்பு மற்றும் ஸ்திரத் தன்மைக்கு எந்த சவாலும் இல்லை. ஆனால், இவை எல்லாம் நம்பிக்கை அளிக்குமா?

மோடியை குறை சொல்ல முடியாது. அவரது அமைச்சரவையில் உள்ளவர்களின் திறமையைதான் சொல்ல வேண்டும். அதற்கு நெடுஞ்சாலை, ரயில்வே, மின்சாரம், வங்கிகள் ஒழுங்குமுறை போன்றவற்றில் என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாக கவனித்தாலே தெரியும்.

கடந்த 2 ஆண்டுக்கு முன்னர் மோடி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்தார். கூட்டணி கட்சிகளின் நிர்பந்தங்கள் எதுவும் இல்லை. அப்போது மிகச் சிறந்த திறமை வாய்ந்தவர்களை தனது அரசில் மோடி வைத்து கொள்வார் என்று பெரும்பாலானோர் எதிர்பார்த்தனர்.

அதற்கேற்ப அவர் அரசுக்கு வெளியில் இருந்து நிபுணர்களை, திறமைவாய்ந்தவர்களை அரசுக்குள் கொண்டு வந்திருக்க முடியும். அதை யாராலும் தடுத்திருக்க முடியாது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 2-வது ஆட்சி காலத்தில் கூட, பல குழப்பங்கள் இரு்நதாலும் நந்தன் நீல்கனியை கொண்டு வந்தனர். ஆதார் திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஆதார்தான் மோடி அரசின் பல முக்கிய திட்டங்களை செயல்படுத்துவதற்கு முக்கியமானதாக உள்ளது.

தனியார் நிறுவனங்களில் உள்ள திறமைகளை இந்திரா காந்தி தொடர்ந்து கொண்டுவந்தார். தொலைதொடர்பு துறையில் மறுமலர்ச்சியை கொண்டு வர சாம் பிட்ரோடாவை அழைத்து வந்தார் ராஜீவ் காந்தி. மின்துறை செயலராக ஆர்.வி.ஷாகியை நியமித்தார் வாஜ்பாய். அவர் கொண்டு வந்த சீர்திருத்த நடவடிக்கைகள்தான் இப்போது பலன் அளித்து கொண்டிருக்கின்றன.

குறைந்த காலமே பிரதமராக இருந்த வி.பி.சிங் கூட, ராஜீவ் காந்தி அமைச்சரவையில் இருந்த அருண் சிங்கை பாதுகாப்பு துறையை நவீனப்படுத்த அழைத்து வந்தார்.

நரசிம்மராவில் இந்த கட்டுரையை தொடங்கியதால், மேற்கூறிய பிரதமர்களில் மக்களிடம் அவர் பிரபலமாக இல்லாதவர். பலம் இல்லாதவர். ஆட்சியில் மெஜாரிட்டி இல்லாதவர். சொந்த கட்சியின் மற்ற தலைவர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டவர். ஆனால், சிறந்த விவேகமும், பெருந்தன்மையும் கொண்டவர். திறமைகளை எங்கு பார்த்தாலும் முக்கியத்துவம் அளித்தவர்.

மன்மோகன் சிங்கை கண்டுபிடித்தவர் அவர்தான். அவரை நிதியமைச்சராக நரசிம்ம ராவ் நியமித்தார். அவருடைய நிதி செயலர் மான்டெக் சிங் அலுவாலியா ஐஏஎஸ் அல்லாத பொருளாதார நிபுணர். ப.சிதம்பரத்தை வர்த்தகத் துறை அமைச்சராக்கினார். மிக முக்கியமான உள்துறை பாதுகாப்பை ராஜேஷ் பைலட்டிடம் ஒப்படைத்தார். இத்தனைக்கும் இவர்கள் எல்லாம் ராஜீவ் காந்தியின் நெருங்கிய வட்டாரங்களாக இருந்தும், அவர்களுடைய திறமைகளை பயன்படுத்தினார். அதன் மூலம் ஒரு மரபை உருவாக்கினார்.

இந்த ஒரு திறமையை நரசிம்ம ராவிடம் இருந்து மோடி கற்று கொள்ளலாம். நரசிம்ம ராவை விட மோடி பிரபலமானவர் என்பதில் சந்தேகம் இல்லை. நரசிம்ம ராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோர் தங்கள் வாழ்நாளில் வயதான காலத்தில்தான் (10 ஆண்டுகள்) பிரதமராக இருந்தனர். ஆனால் மோடிக்கு வயதும் இருக்கிறது. ராஜீவ் காந்தி மிக குறைந்த வயதில் பிரதமராகி விட்டார்.

வாக்காளர்களுக்கு புதிய இந்தியாவை உருவாக்கவும் நம்பிக்கையை ஏற்படுத்தவும் மோடிக்கு பல புதிய யோசனைகள் இருக்கின்றன. ஆனால், அவற்றை செயல்படுத்துவதற்கு சரியான குழுதான் இன்னும் அவருக்கு கிடைக்கவில்லை. ஆனால் எதை பற்றியும் கவலைப்படாத, பொறுமை இல்லாத, கொள்கை இல்லாத வாக்காளர்கள் விரைவில் கேள்விகள் கேட்க கூடும்.

- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர்,
இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர்,
இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர்.
தொடர்புக்கு : shekhargupta653@gmail.com

தமிழில் சுருக்கமாக: ஏ.எல்.பழனிசாமி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in