

தெலங்கானா மசோதா மக்களவையில் நிறைவேறியபோது, லோக் சபா டி.வி.யின் நேரடி ஒளிபரப்பு தடைபட்டதற்கு சிக்னல் கிடைக்காமல் போனதே காரணம் என்று விசாரணை அறிக்கை தெரிவிக்கிறது.
தெலங்கானா தனி மாநிலம் உருவாக வழிவகுக்கும் ஆந்திர மறுசீரமைப்பு மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பிற்பகல் சுமார் 3 மணியளவில் இம்மசோதா மீது உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே பேசத் தொடங்கியதும், லோக் சபா டி.வி.யில் நேரடி ஒளிபரப்பு நின்றுபோனது. “லோக் சபா லைவ்” மிக விரைவில் தொடங்கும் என அறிவிப்பு வெளியானாலும் சுமார் 90 நிமிடம் மக்களவை நிகழ்ச்சிகள் வெளியாகவில்லை.
இதனிடையே மக்களவையில் தெலங்கானா மசோதா நிறைவேறி, அவை ஒத்திவைக்கப்பட்டு விட்டது. அரசு திட்டமிட்டு நேரடி ஒளிபரப்பை நிறுத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஒளிபரப்பு தடைபட்டதற்கான காரணத்தை ஆராய லோக் சபா டி.வி.யின் தலைமை செயல் அதிகாரி ராஜீவ் மிஸ்ரா விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் ராஜீவ் மிஸ்ரா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “மக்களவையில் உள்ள 9 கேமராக்களில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு சிக்னல்கள் தடைபட்டதே ஒளிபரப்பு நின்றதற்கு காரணம் என தெரியவந்துள்ளது. ஆடியோ சிக்னல்கள் வந்துள்ளன. ஆனால் வீடியோ சிக்னல்கள் வரவில்லை. இதற்கு கேபிள் பழுதானதே காரணம் என்று கண்டறியப்பட்டு அந்த கேபிள் புதன்கிழமை அதி
காலை மாற்றப்பட்டது. அப்போது கிடைத்த ஆடியோ பதிவு லோக் சபா டி.வி.யில் வியாழக்கிழமை வெளியாகும். மேலும் லோக் சபா டி.வி. இணைய தளத்திலும் பதிவேற்றம் செய்யப்படும்” என்றார்.